கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இந்த தாக்குதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரானில் 2000 க்கும் மேலான உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள முக்கிய உட்கட்டமைப்புகளும் மிகப் பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
அதே நேரத்தில், ஈரானும் எதிரி நாட்டின் மீது பதில் நடத்தி வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. அதோடு நிற்காமல், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், கத்தார், சவூதி அரேபியா, துபாய், பக்ரைன் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீதும் ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
தற்போது, வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியுள்ள இடங்களையும் தாக்குவோம் எனவும், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளையும் தாக்குவோம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் குவைத்தில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். அவர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை குவைத் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து, குவைத் மின்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ், ” குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய சேவை கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் தொழிலாளி ஒருவர் உயிர் இழந்தார்” என்று தெரிவித்துள்ளார். போர் முடிவு பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா தரை வழி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மத்திய கிழக்குப் பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
