கூடுதல் தொகுதி கேட்டு திமுகவுக்கு கெடு விதித்தார் த.வா.க., வேல்முருகன்

சென்னை: ‘தி.மு.க., கூட்டணியில் தொடர, கூடுதல் தொகுதிகள் வேண்டும்’ என, த.வா.க., தலைவர் வேல்முருகன், தி.மு.க., தலைமைக்கு கெடு விதித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். வரும் தேர்தலில், இரண்டு தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டுள்ளார். ஆனால், ஒரு தொகுதியை மட்டுமே தருவதாக, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் அரசியல் தலைமை குழுவின் அவசர கூட்டம், சென்னையில் நடந்தது.

அதன்பின் வேல்முருகன் அளித்த பேட்டி: கடந்த நான்கு தேர்தலாக, தி.மு.க., கூட்டணியில் உள்ளோம். லோக்சபா தேர்தலில், ‘சீட்’ வேண்டும் என, நாங்கள் கோரிக்கை வைத்தபோது, சட்டசபை தேர்தலில், உரிய இடம் கொடுப்பதாக சொல்லியிருந்தனர். இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டதற்கு, இதுவரை பதில் வரவில்லை.

அதோடு, தமிழக மக்கள் நலனுக்காக, 10 கோரிக்கைகளை முன்வைத்தேன். அதற்கும் பதில் இல்லை. எனவே, எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், கூட்டணியில் தொடருவதை, மறு பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம். தி.மு.க., தலைமை சொல்வதை பொறுத்து, விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link