கூட்டணிக்கு விட்டுக்கொடுத்த அ.தி.மு.க.,; அவிநாசி தொகுதியில் களமிறங்கும் பா.ஜ.

திருப்பூர்: அ.தி.மு.க.வின் பலமான கோட்டையான அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதியின் கதவு, கூட்டணி கட்சியான பா.ஜ.வுக்கு திறந்து கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில், கடந்த, 1972ல் உருவான அ.தி.மு.க. கடந்த, 1977 முதல், தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் போட்டியிட்டு வருகிறது. இதில், மாநிலத்தின் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அ.தி.மு.க. வளர்ச்சி பெற்று, அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. செல்வாக்கு பெற்ற தொகுதியாகவே இருந்து வருகிறது.

அந்த வரிசையில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி (தனி) தொகுதியும் ஒன்று. கடந்த, 1977ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க. தோற்றது. 1980ல் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட மா.கம்யூ. வெற்றி பெற்றது.

வலுவான தொகுதி

அதன்பின், 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021ல் நடந்த, 9 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தான் களமிறங்கினர்; எந்தவொரு கூட்டணி கட்சிக்கும் இத்தொகுதி விட்டுக் கொடுக்கப்படவில்லை. இதில், 1996ல் நடந்த தேர்தலில் மட்டும், தி.மு.க. வெற்றி பெற்றது. எஞ்சிய அனைத்து தேர்தல்களிலும், அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது.

குறிப்பாக, கடந்த 2001 முதல், 2021 வரை நடந்த, 5 தேர்தல்களிலும், அதாவது, தொடர்ந்து, 25 ஆண்டாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.இவ்வாறு, அ.தி.மு.க.வின் செல்வாக்கு பெற்ற தொகுதியாக உள்ள அவிநாசி தொகுதியை, இம்முறை கூட்டணி கட்சியான பா.ஜ. வுக்கு விட்டுக் கொடுத்துள்ளது அ.தி.மு.க. கட்சி தலைமை. பா.ஜ. சார்பில், மத்திய இணை அமைச்சர் முருகன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.வினர் வேகம் காட்டி வருகின்றனர்.

சமரச மனநிலை!

கடந்த, 2021 சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ. அவிநாசி தொகுதியை கேட்டது. ‘மிக எளிதாக ஜெயிக்கக் கூடிய தொகுதியை விட்டுக் கொடுக்கவே முடியாது’ என, அப்போதைய சட்டடசபை சபாநாயகரும் ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,வுமாக உள்ள தனபால் உள்ளிட்ட உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ‘போர்க்கொடி’ பிடித்தனர்.

அதன் விளைவாக, அவிநாசியை தவிர்த்து, தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டது பா.ஜ. அந்த தேர்தலில், அ.தி.மு.க.,வினர் கணக்குப்படி, அவிநாசி தொகுதியில் மிக எளிதாக அக்கட்சி பெற்றது. கடந்த, 1980க்கு பின், 45 ஆண்டுகால இடைவெளிக்கு பின், கூட்டணி கட்சிக்கு தனது வலுவான கோட்டையாக உள்ள அவிநாசி தொகுதியின் கதவை திறந்து கொடுத்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை.

தி.மு.க.வின் ‘மூவ்’ என்ன?

தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.வை பொறுத்தவரை, சமீப ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில், பெரும்பாலும் கூட்டணி கட்சிக்கே அவிநாசி தொகுதியை ஒதுக்கி விடுகிறது. ஆனால், அவிநாசி, திருமுருகன்பூண்டி நகராட்சிகள், அன்னுார் பேரூராட்சி என, நகர மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் பெரும்பான்மை பலத்தை தி.மு.க. பெற்று அதிகார பொறுப்பில் உள்ள நிலையில், இம்முறை தேர்தலில் தி.மு.க. நேரடியாக களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரம், கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வுக்கு அவிநாசி தொகுதியை ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பேச்சு எழுந்துள்ளது.

Source link