கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லியாக இருந்தது எப்படி தெரியுமா? | ‘வாவ்’ வியூகம் 11 | MGR’s wow strategy that helps to win the elections

இதனால், எப்படி முதன்முறை (அதாவது 1977-ல்), அதிமுக நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே ஸ்ட்ரோக்கில் வெற்றி பெற்றதோ, இந்த முறை (1980-ல்) ஒரே ஸ்ட்ரோக்கில் சட்டப்பேரவையிலும் தோற்கும் என்று பேசப்பட்டது. ஆனால் எம்ஜிஆர் வேறொரு ஆயுதத்தைக் கையில் எடுத்தார். 1980 சட்டப்பேரவைத் தேர்தலில், அவர் சம்பாதித்தது மக்களின் அனுதாபம். தனது அரசு அபாண்டமாக கலைக்கப்பட்டதாக செல்லுமிடமெல்லாம் கூறினார். ‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்’ என்று எம்ஜிஆர் முன்னெடுத்த பிரச்சாரப் பேரலை அனுதாப அலையாக மாறி மீண்டும் 1980-ல் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது.

மேலும், 3 ஆண்டு கால ஆட்சியில் எம்ஜிஆருக்கு பெண் வாக்காளர்கள் மத்தியில் அபிமானம் கூடியிருந்தது. மதிய உணவுத் திட்டத்தை அவர் வலுப்படுத்தியிருந்தது அவருக்கு ஏழைகளுக்கான தலைவர் என்ற அடையாளத்தை தந்திருந்தது. மகளிர்க்கு சிறப்புப் பேருந்து, மதுவிலக்கு என்று அவர் கொண்டுவந்த திட்டங்கள் கிராமங்கள் வரை அவருக்கு ஆதரவைப் பெற்றுத் தந்திருந்தது.

எம்.ஜி.ஆர் இந்திரா  காந்தி

எம்.ஜி.ஆர் இந்திரா காந்தி

1980 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக முன்னணி கூட்டணியில் சிபிஐ, சிபிஎம், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், அனைத்திந்திய ஃபார்வர்டு ப்ளாக் மற்றும் எம்ஜிஆர் ஆதரவில் களமிறங்கிய 11 சுயேட்சைகள் இருந்தனர். இத்தனை கட்சிகளை அரவணைத்து எம்ஜிஆர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பார்த்துக் கொண்டார். அப்போது எம்ஜிஆர் பேசிய மேடைகளில் எல்லாம், எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி என்று பந்தை மக்கள் பக்கம் உருட்டிவிடத் தவறியதில்லை என்று அந்தக்கால பிரச்சாரங்களை பார்த்து, கேட்டவர்கள் சொல்கின்றனர்.

பலமாக அதிமுக மின்னிக் கொண்டிருக்க, காங்கிரஸ் – திமுக கூட்டணியில் அந்த இரு கட்சிகளோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகையில் முதல்வர் வேட்பாளர் யார், தொகுதிப் பங்கீடு என்று திமுக – காங்கிரஸ் இடையே சிக்கல்கள் நிலவியது.

கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஜிகே மூப்பனார் முயற்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் கூட, தேர்தல் களத்தில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை விட திமுக அதிக வாக்குகளைப் பெற்று கருணாநிதிக்கு பலம் சேர்க்க வேண்டும் என்று திமுகவினர் கடும் முனைப்பு காட்டினர்.

கூட்டணியில் கோட்டை விட்டதாலும், அமைத்தக் கூட்டணியில் முழு நம்பிக்கையை வைக்காததாலும் தான் திமுக கூட்டணி தோற்றது என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன. காற்று எம்ஜிஆர் பக்கம் வீச அவர் வெற்றி கண்டார்.

இரண்டு முறை முதல்வராக இருந்துவிட்டார். மக்களுக்குப் பால் புளித்துப் போயிருக்கும் என்று 1984 தேர்தலை எதிர்க்கட்சிகள் அணுக நினைக்க, மத்தியிலும், ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரு மிகப் பெரிய அனுதாப அலை வீசியது. 1984-ம் அக்டோபர் மாதம் 31-ம் தேதி இந்திரா காந்தி படுகொலை நடந்தது.

Source link