சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், ”கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
இந்தியா டுடே செய்தி சேனல் நிகழ்ச்சியில், ”ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனர். கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்” என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் (காங்கிரஸ்) தவறு” என குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் மோதல்
காங்கிரஸ் அதிக தொகுதியில் போட்டியிடும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது ஆட்சியில் பங்கிற்கு வாய்ப்பில்லை என்று கூறி சர்ச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலினுக்கு கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். இதன் வாயிலாக, காங்கிரஸ் எம்பி மீண்டும் சர்ச்சையை தொடங்கி உள்ளார். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மோதல் நீடிக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
