-நமது நிருபர்-
தமிழகத்தில், 23 கட்சிகளுடன் பிரமாண்ட கூட்டணியை, தி.மு.க., உறுதி செய்துள்ள நிலையில், அ.தி.மு.க., தரப்பில் த.வெ.க., விஜய் வரவை எதிர்பார்த்து, பழனிசாமி காத்திருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
த.வெ.க.,வுடன் கூட்டணி உறுதியாகி வருவதாக, நாமக்கல்லில் நடந்த பிரசாரத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார். ஆனால், அ.தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை என, த.வெ.க., தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, தி.மு.க., மட்டுமின்றி, அ.தி.மு.க.,வையும் விஜய் விமர்சித்து பேசினார். இதை தொடர்ந்து, அவருடன் கூட்டணி அமைக்கும் முயற்சியை, அ.தி.மு.க., தலைமை கைவிட்டது.
தி.மு.க., தலைமையில், 23 கட்சிகளை இணைத்து, பலமான கூட்டணியை அமைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு இனி கட்சிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார்.
த.வெ.க.,வை இழுத்தால் மட்டுமே, அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனவே, விஜயை எப்படியாவது அ.தி.மு.க., கூட்டணிக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு, கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே, தொகுதி பங்கீட்டை முடிக்காமல் பழனிசாமி காத்திருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தற்போது த.வெ.க.,வுடன் கூட்டணி அவசியம் என, அ.தி.மு.க., கருதுவது போல், பா.ஜ.,வும் கருதுகிறது. அதனால், விஜயுடன் பேசி வருகின்றனர். கூடவே, பெரிய கட்சியுடன் கூட்டணி இல்லாத நிலையில், த.வெ.க., தனித்து போட்டியிட்டால், தி.மு.க.,வின் கடைசி நேர நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது எனவும் அ.தி.மு.க., தரப்பில் இருந்து விஜயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், கூட்டணி குறித்து விஜய் நிறைய யோசிப்பதால், அவருடைய முடிவுக்காக பழனிசாமி காத்திருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப் படுகிறது.
