கேப் கனாவெரல்: அமெரிக்காவில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு பின் மனிதர்களை நிலவுக்கு சுமந்து செல்லும், 'ஆர்டெமிஸ் –

கேப் கனாவெரல்: அமெரிக்காவில் இருந்து, 50 ஆண்டுகளுக்கு பின் மனிதர்களை நிலவுக்கு சுமந்து செல்லும், ‘ஆர்டெமிஸ் – 2’ விண்கலத்தின், ‘கவுன்ட் டவுன்’ ஒத்திகையை நாசா துவக்கியது.

கடந்த 1972ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, நிலவுக்கு அனுப்பப்படும் ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதற்கான இரண்டு நாள் கவுன்ட் டவுன் ஒத்திகை நேற்று முன்தினம் துவங்கியது.

ராக்கெட் மற்றும் விண்கலம், மனிதர்களை சுமந்து செல்ல பாதுகாப்பானது தானா என்பதை உறுதிப்படுத்தும் கடைசி மற்றும் மிக முக்கியமான சோதனை இது. ஏவுதலுக்கு முன்பே அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் சரியாக செயல்படுகிறதா என்பது இந்த ஒத்திகையின் போது உறுதி செய்யப்படும்.

இன்ஜின்களை மட்டும் இயக்காமல், மற்ற எல்லா பணிகளையும் ஒருமுறை ஒத்திகை பார்த்து உறுதி செய்து கொள்வதற்காகவே இந்த கவுன்ட் டவுன் துவங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவைப் பொறுத்தே, நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் நான்கு பேரின் பயணம் எப்போது துவங்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

நிலவுக்கு செல்லவுள்ள கமாண்டர் ரீட் வைஸ்மேன் மற்றும் அவரது குழுவினருக்கு கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஒத்திகை வெற்றி பெற்றால், வரும் 8ம் தேதி விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பல்லோ திட்டத்தின் கீழ், கடந்த 1968 முதல் 1972 வரை 24 விண்வெளி வீரர்களை நாசா நிலவுக்கு அனுப்பியுள்ளது. இவர்களில் 12 பேர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கினர்.

Source link