கேரள மாநிலம் கோழிக்கூடு மாவட்டம், குட்டிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மூன்று வயது சிறுமிக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை, அவரது பெற்றோர் கோழிக்கூடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, நேற்று (20-03-26) சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
தீவிர இரைப்பை குடல் தொற்று காரணமாகச் சிறுமி இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். இருப்பினும், அவரது ரத்தம் மற்றும் சளி ஆகியவை சோதனைக்குட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில், தொற்றின் காரணமாகச் சிறுமி உயிர் இழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த சிறுமியுடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. இதில், 11 குழந்தைகளுக்கு சிகெல்லா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து குழந்தைகள் கோழிக்கூடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, குட்டிக்காட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களிடம் இந்த தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டுவருகின்றனர். இதன் காரணமாக, அனக்குழிகரை பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தொற்று குறித்து மருத்துவ நிபுணர்கள், “சிகெல்லா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி மற்றும் உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். பொதுவாக, சுகாதாரமற்ற நீர்நிலைகள் மற்றும் குடிநீர், அசுத்தமான சுற்றுப்புறப் பகுதிகள் போன்ற காரணங்களால் இந்த தொற்று எளிதில் பரவும். எனவே, குடிநீரைக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். மேலும், தூய்மையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
