கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஏப்., 7 முதல் விசாரிக்க உள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிஇல்லை.
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 2018 செப்டம்பரில், 4:1 என்ற விகிதத்தில் பெரும்பான்மை தீர்ப்பு அளித்தது.
போராட்டங்கள்
அதாவது, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கேரளா முழுதும் போராட்டங்கள் வெடித்தன. இத்தீர்ப்பை எதிர்த்து, 60-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை நேரடியாக முடிக்காமல், இதில் அடங்கியுள்ள ஆழமான சட்டக் கேள்விகளை தீர்க்க, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு மாற்றி, 2019 நவம்பரில் உத்தரவிட்டது.
அதன்பின், இந்த விவகாரம் விசாரணைக்கு வராமலேயே இருந்த நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு எப்போது விசாரிக்கப்படும் என்பதற்கான விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
மறு ஆய்வு
அதன்படி, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஏப்., 7 முதல் இந்த விவகாரத்தை விசாரிக்கும் என, அமர்வு குறிப்பிட்டது. மார்ச் 14ல், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏப்., 7 — 9 வரை, சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருபவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான தரப்பினரின் வாதங்கள் கேட்கப்படும். ஏப்., 14 — 16 வரை, மறு ஆய்வை எதிர்ப்பவர்களின் வாதங்கள் கேட்கப்படும்.
ஏப்., 21ல், பதில் வாதங்கள் வைக்கப்படும். ஏப்., 22ல், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் இறுதி வாதங்களுடன் விசாரணை நிறைவடையும் என, அமர்வு தெரிவித்துள்ளது.
@block_G
subboxhd@காங்., – கம்யூ., வார்த்தை மோதல்
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் ஏப்ரலில் தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சபரிமலை விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது. இந்த வழக்கை, ஏப்., 7 முதல் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், ‘கேரள அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்த வேண்டும்’ என, பிரதான எதிர்க்கட்சியான காங்., வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்து, பாலக்காடு மாவட்டத்தில், கேரள மார்க்., – கம்யூ., செயலர் எம்.வி.கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதை இடது ஜனநாயக முன்னணி அரசு முன்பு ஆதரித்தது. கட்சியின் நிலைப்பாடு என்பது வேறு விஷயம். கட்சி எடுக்கும் முடிவை அப்படியே அரசு செயல்படுத்தும் என, கருத முடியாது. அரசுக்கு எப்போதும் அதன் சொந்த நிலைப்பாடு இருக்கும். இந்த விவகாரத்தால், எங்களுக்கு எந்தவித இக்கட்டான சூழலும் ஏற்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு என்ன தெரிவிக்கும் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் காங்., ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பது புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
– டில்லி சிறப்பு நிருபர் -:
