திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கன்னூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ‘‘பாஜகவுக்கும் சிபிஎம்-க்கும் இடையே மறைமுக கூட்டணி இருக்கிறது. இவ்விரு சக்திகளும் இணைந்துதான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை எதிர்க்கிறார்கள்.
பிரதமர் எங்கு சென்றாலும், கோயில்கள், மதம், கடவுள்கள் குறித்துப் பேசுகிறார். ஆனால், கேரளாவுக்கு வரும்போது சபரிமலை கோயில் விவகாரத்தை அவர் எழுப்புவதில்லை. சிபிஎம் தலைவர்கள் சபரிமலை கோயிலில் இருந்து தங்கத்தை திருடியுள்ளார்கள். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்து மதத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் அவர், கேரளாவுக்கு வந்துவிட்டு சபரிமலை குறித்து எதுவும் பேசாமல் செல்கிறார்.
