கோழிக்கோடு: கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் – பா.ஜ., இடையே ரகசிய கூட்டு உள்ளது என காங்., லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், காங்., தேசிய தலைவர் கார்கே தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டினர்.
கோழிக்கோட்டில் நடந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி பிரசாரக் கூட்டத்தில் காணொலி வழியாக ராகுல் பேசியதாவது: இத்தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ., -மார்க்சிஸ்ட் இடையிலான கூட்டணி என இரண்டு சக்திகள் மட்டுமே உள்ளன. பா.ஜ., வுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ரகசிய கூட்டணி உள்ளது. இரு கட்சிகளும் ஒரே மாதிரியான கொள்கை களை பின்பற்றுகின்றன. அவர்கள் பொதுமக்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள தவறிவிட்டனர்.
அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் விசாரணையை காங்., தலைவர்கள் எதிர்கொள்ளும் வேளையில், முதல்வர் பினராய் விஜயன் மீது ஏன் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மத்திய விசாரணை அமைப்புகள் பாரபட்சமாக குறி வைத்து செயல்படுகின்றன. இதுவே பா.ஜ., – மார்க்சிஸ்ட் இடையே உடன்பாடு இருப்பதற்கான ஆதாரம்.
மத்திய அரசு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளையும், மாநில அரசு 40 லட்சம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக பெரிய அளவில் வாக்குறுதி அளித்த போதிலும் வேலை வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. மேலும் கேரளாவில் அரசு நியமனங்களில் தகுதியை விட அரசியல் சார்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு திறமை புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
மார்க்சிஸ்ட் – பா.ஜ.,இடையே ரகசிய உடன்பாடு இருப்பதால் அவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை விவரிக்க அதை ‘ கம்யூனிஸ்ட் ஜனதா கட்சி ‘ என்று கூறுகிறேன். இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு மறைமுகமாக பயனளிக்கும் வகையில் பா.ஜ., பல தொகுதிகளில் வேண்டும் என்று பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நாங்கள் வாக்குறுதி அளித்ததை செய்வோம். நாங்கள் பொய்யான உறுதிமொழிகளை அளிப்பதில்லை.
ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால் உலகளாவிய கால்பந்து நட்சத்திரங்களை வரவேற்கும் திறன் கொண்ட பிஃபா அங்கீகாரம் பெற்ற மைதானம் கேரளாவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
