கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய இன்டர் காஷி அணி 2-1 என, கேரளாவை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. கேரளாவின் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ், இன்டர் காஷி எப்.சி., அணிகள் மோதின.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் இன்டர் காஷி அணிக்கு நாரிஸ் பெட்கெவிசியஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இன்டர் காஷி அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் அசத்திய இன்டர் காஷி அணிக்கு 78 வது நிமிடத்தில் ஆல்பிரட் பிளானாஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய கேரளா அணிக்கு 84வது நிமிடத்தில் விக்டர் பெர்டோமியு ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
ஆட்டநேர முடிவில் இன்டர் காஷி அணி 2-1 என்ற கோல் கணக்கில் இம்முறை முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’ என, 5 புள்ளிகளுடன் இன்டர் காஷி அணி 6வது இடத்துக்கு முன்னேறியது. ‘ஹாட்ரிக்’ தோல்வியடைந்த கேரளா அணி, 12வது இடத்தில் உள்ளது.
மோகன் பகான் ‘ஹாட்ரிக்’
கொல்கட்டாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் மோகன் பகான், முகமதன் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த மோகன் பகான் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் மோகன் பகான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. தொடர்ந்து 3வது தோல்வியை பெற்ற முகமதன் அணி 14வது இடத்தில் உள்ளது.
