மலையாளத்தில் குழந்தை நட்சத்திரம் முதல் நாயகி வரை ஏராளமான படங்களில் நடித்த அஞ்சலி நாயர் தமிழிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு ‘நெல்லு’ என்ற படம் மூலம் அறிமுகமாகி 2014ஆம் ஆண்டு ‘இதுவும் கடந்து போகும்’, 2021ஆம் ஆண்டு ரஜினியின் ‘அண்ணாத்த’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சித்தார்த் நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘சித்தா’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். சபு எம் ஜேகப் உருவாக்கிய ‘டிவெண்டி 20 கட்சி’ என்ற அரசியல் கட்சியில் சமீபத்தில் இணைந்த இவர், அக்கட்சி கூட்டணி வைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருப்பணித்துறா தொகுதியில் போட்டியிடுகிறார். இப்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரைப் போல் மலையாள நடிகைகள் வீனா நாயர், லக்ஷ்மி பிரியா ஆகியோரும் எட்டுமனூர் மற்றும் பெரும்பாவூர் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் தமிழில் நடிக்கவில்லை.
இத்தேர்தலில் டிவெண்டி 20 கட்சிக்கு மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று தொகுதிகளில் நடிகைகள் களம் காண்கின்றனர். கேரளாவில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.
