கேரளம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாநிலத் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி செண்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, சி.பி.எம் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். கட்சிச் சின்னத்தில் போட்டியிடும் 75 தொகுதிகள் மற்றும் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் 6 தொகுதிகள் என 81 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
கேரளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 86 தொகுதிகளில் சி.பி.எம் போட்டியிடுகிறது. மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் முதல்வர் பினராயி விஜயன் சிட்டிங் தொகுதியான தர்மடத்தில் போட்டியிடுகிறார். சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் போட்டியிடவில்லை. ஆனால், அவரது மனைவி பி.கே.சியாமளா தளிப்பறம்பு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கொல்லத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான நடிகர் முகேசுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. சினிமா படப்பிடிப்பில் பாலியல் தொல்லை கொடுத்தாகப் புகார் எழுந்ததால் சீட் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஜெயமோகன் என்பவர் போட்டியிடுகிறார்.

இரண்டு முறை தலசேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஏ.எம்.சம்சீருக்கு இந்த முறை சீட் வழங்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.கே.சைலஜா மட்டனூர் தொகுதியில் இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவரை அந்தத் தொகுதியில் இருந்து மாற்றி காங்கிரஸ் கைவசம் உள்ள பேராவூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதுபோன்று சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
