கேள்விகள் எளிதாக இருந்ததால் பதற்றம் தணிந்தது மாணவ – மாணவியர் உற்சாக பேட்டி * சி.பி.எஸ்.இ., தேர்வு

புதுடில்லி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முதல் நாள் தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாக டில்லி மாணவ – மாணவியர் தெரிவித்தனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரிய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் இந்தியா மற்றும் 26 நாடுகளில் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 10ம் தேதியும் பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 10ம் தேதியும் நிறைவடைகிறது. மொத்தம், 46 லட்சம் மாணவ – மாணவியர் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வுகள் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டபடி நடத்தப் படுகின்றன.

தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன் இருந்த பதட்டம், கேள்வித்தாளை பார்த்தவுடன் இல்லை என பலர் கூறினர். கேள்விகள் எளிமையாக இருந்ததாக டில்லியை சேர்ந்த மாணவ – மாணவியர் கூறினர்.

விமானப்படை பாலபாரதி பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி ஒமிஷா தொண்டியல் கூறுகையில், “தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன், மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். ஆனால், கேள்வித் தாளை படித்தவுடன் பதற்றம் தணிந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வு எழுதியுள்ளேன். கடந்த ஆண்டு கேள்வித்தாளை விட, இந்த ஆண்டு மிக எளிமையாக தயாரித்துள்ளனர். அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்ததால், அரை மணி நேரத்துக்கு முன்பே தேர்வு எழுதி முடித்தேன்,”என்றார்.

அதே பள்ளியின் பிளஸ் 2 பயோடெக் மாணவி ஒருவர் கூறுகையில், ‘கேள்விகள் பெரும்பாலும் தத்துவார்த்தமாக இருந்தன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் எளிதாக இருந்தது. கேள்விகள் பெரும்பாலும் புத்தகத்திலிருந்தே கேட்கப்பட்டு இருந்தன. பெரும்பாலானவை கோட்பாடு சார்ந்தவை. எனவே, பதிலளிக்க மிகவும் எளிதாக இருந்தது’ என்றார்.

டில்லி பப்ளிக் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி நிஷ்தா கூறுகையில், “பெரும்பாலான கேள்விகள் எளிமையாக இருந்தன. மற்றவர்களைப் போல, நானும் மிகுந்த பயத்துடனும் பதற்றத்துடனும் இருந்தேன். கேள்வித் தாளை பார்த்தவுடன் அனைத்தும் நீங்கி, மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது,”என்றார்.

பிளஸ்2 மாணவி ஓஷன் கூறுகையில், “எம்.சி.க்யூ., கேள்விகள் வழக்கமாக கடினமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் எளிதாக இருந்தன. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க போதுமான நேரம் கிடைத்தது. 90 சதவீத மதிப்பெண் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்,”என்றார்.

Source link