கொச்சி: உலகம், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறி வரும் நிலையில், கேரள சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஏ.ஐ., எனப்படும்,

கொச்சி: உலகம், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறி வரும் நிலையில், கேரள சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுந்து விளையாடுகிறது. மார்க்சிஸ்ட், காங்., – பா.ஜ., என அனைத்து கட்சிகளும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங் கு மொத்தமுள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தேர்தல் போர்

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட், காங்., – பா.ஜ., உள்ளிட்ட முக்கிய கட்சிகளின், ‘வார் ரூம்’கள், டிஜிட்டல் மயமாகி உள்ளன. சமூக ஊடகங்கள் மூலம் வாக்காளர்களை கவர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்குவதில் அக்கட்சிகள், ‘பிஸி’யாக உள்ளன.

இந்த வீடியோக்கள் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருப்பதால், எது உண்மை, எது பொய் என கண்டறிவது வாக்காளர்களுக்கு சவாலாக உள்ளது. உண்மையான தேர்தல் போர், சமூக ஊடகத்தில் தான் நடக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், ஆளும் இடதுசாரி அரசை குறிவைக்க, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிற இடதுசாரி தலைவர்கள் அதில் சம்பந்தப்பட்டிருப்பது போன்ற, ஏ.ஐ., வீடியோக்களை காங்., உருவாக்கியுள்ளது.

மேலும், மறைந்த காங்., தலைவர் உம்மன் சாண்டியின் உருவத்தை பயன்படுத்தி, வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பது போன்ற ஏ.ஐ., பிரசார வீடியோக்களையும் காங்., உருவாக்கி உள்ளது.

அங்கமாலி தொகுதி காங்., வேட்பாளரும், எம்.எல்.ஏ.,-வுமான ரோஜி எம். ஜான் கூறுகையில், ”கட்சியின் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல, ஏ.ஐ., வீடியோக்களை பயன்படுத்துகிறோம்,” என்றார். எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பி.ஆர்.சிவசங்கரும், ஏ.ஐ., பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தத்ரூபம்

அதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பெருந்திரளான மக்கள், மூவர்ணக் கொடியையும், பா.ஜ., கொடிகளையும் ஏந்தி பேரணி செல்வது போல உள்ளது. இந்த காட்சிகள் மிகவும் தத்ரூபமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் உள்ளன.

மேலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருவங்களை பயன்படுத்தி, பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்பது போல ஏ.ஐ., வீடியோக்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. ஆளும் இடதுசாரி, ஏ.ஐ., பயன்பாட்டில் குறைந்த அளவிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

Source link