கொச்சி: சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, பாலியல் தொல்லை தந்ததாக கும்பமேளா புகழ் மோனாலிசா குற்றம்சாட்டி

கொச்சி: சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, பாலியல் தொல்லை தந்ததாக கும்பமேளா புகழ் மோனாலிசா குற்றம்சாட்டி உள்ளார்.

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனாலிசா போஸ்லே. இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர். தமது கண்களால் அனைவரையும் கவர்ந்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. கேரளாவில் சினிமா படப்பிடிப்பில் இருந்த போது தமது காதலன் முகமது பர்மான்கான் என்பவருடன் திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்து அவரை திருமணம் செய்துகொண்டார்.

இந் நிலையில், கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மோனாலிசா, தமது முதல் சினிமா பட இயக்குநர் சனோஜ்மிஸ்ரா பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

எனது முதல் படம் தி டைரி ஆப் மணிப்பூர். இந்த படத்தின் இயக்குநர் சனோஜ்மிஸ்ரா படப்பிடிப்பின் போது பலமுறை தவறான நோக்கத்துடன் என்னை அணுகினார். நேபாளம், டேராடூன் ஆகிய இடங்களில் பலமுறை என்னிடம் மோசமாக நடந்துகொண்டார். அதை நான் எதிர்த்தேன்.

இது குறித்து என் குடும்பத்தினரிடம் அப்போதே தெரிவித்தேன். என் முதல் படம் என்பதால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு பணமே குறிக்கோளாக இருந்தது. சனோஜ் மிஸ்ரா மோசமானவர், சினிமாவில் அவர் சிறுமிகளிடம் கூட மிக மோசமாக நடந்து கொள்கிறார்.

சினிமால் நடிக்க வைக்கிறேன் என்று கூறி சினிமாவின் பெயரை பயன்படுத்தி மோசமான செயல்களை செய்கிறார். எங்களுக்கு பல இடங்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. எனது சொந்த ஊருக்கு செல்ல அஞ்சுகிறேன், இங்கேயே தொடர்ந்து வாழ விரும்புகிறேன்.

இவ்வாறு மோனாலிசா போஸ்லே கூறினார்.

மோனாலிசாவின் காதல் திருமணம், லவ் ஜிகாத் என்று இயக்குனர் சனோஜ் மிஸ்ரா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Source link