‘தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களுடன் வரும் போது, உங்கள் கட்சியின் கொடியை கையில் ஏந்தி வர வேண்டும். எத்தனை கொடி எங்கள் கண்ணில் படுகிறதோ, அந்த எண்ணிக்கைக்கு தான் உங்களுக்கு பணம் வழங்கப்படும்’ என, தி.மு.க., நிர்வாகிகள் கறாராக நடந்து கொள்வதால், கூட்டணி கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில், 20க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, ஒவ்வொரு கட்சியின் நிர்வாகியும், தங்களுடன் 10 முதல் 20 தொண்டர்களை அழைத்துச் சென்று, தி.மு.க.,வினருடன் இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.
இப்பணியில் தி.மு.க.,வினருக்கு, ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் தருகின்றனர். கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு, 500 ரூபாய் தருகின்றனர். எங்களுடன் வரும் தொண்டர்களுக்கும் பணம் கேட்டால், தி.மு.க.,வினர் தர மறுக்கின்றனர். இது தொடர்பாக, வேட்பாளர்களிடம் கேட்டால், ‘கட்சியின் வார்டு செயலர், பகுதி செயலர்களை சந்திக்கவும். உங்களுக்கு வேண்டியதை அவர்கள் செய்து தருவர்’ என்கின்றனர்.
அவர்களை சந்தித்தால், ‘உங்கள் கட்சிக்கு இந்த பகுதியில் தொண்டர்களே கிடையாது. நீங்களோ, 10 பேரை அழைத்து வந்தேன், 20 பேரை அழைத்து வந்தேன் என்று கூறி, அனைவருக்கும் பணம் கேட்கிறீர்கள்; எங்களை விட நீங்கள் அதிக தொண்டர்களை அழைத்து வந்து விட்டீர்களா?
‘வேட்பாளருடன் வரும் போது, உங்கள் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி பிரசாரத்திற்கு வர வேண்டும். உங்கள் கொடி எத்தனை தெரிகிறதோ, அதை எங்கள் ஆட்கள் கணக்கெடுத்து கொள்வர்.
‘அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பணம் தருவோம்’ என்று கறாராக கூறுகின்றனர். இதை, எங்கள் கட்சி தலைமைகளிடமும் தெரிவித்து விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
