கொல்கட்டா:மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம், 91 லட்சம்

கொல்கட்டா:மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம், 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், ஆளும் திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ.,வின் ஓட்டு வங்கிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த நவம்பரில் துவங்கிய எஸ்.ஐ.ஆர்., பணி மூலம், 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 7.66 கோடியில் இருந்து, 6.77 கோடியாக சரிந்துள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தால் வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கும் சட்டசபை தேர்தலில், வெற்றி – தோல்விக்கான கணக்கீடுகள் முற்றிலும் மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீக்கப்பட்ட 91 லட்சம் வாக்காளர்களில், 66.6 லட்சம் வாக்காளர்கள் ஆளும் திரிணமுல் காங்., பலமாக உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

அதே போல், பா.ஜ.,வின் நம்பிக்கையான ஓட்டு வங்கியாக திகழும் மதுவா சமூகத்தினர் வாழும், 55 தொகுதிகள் வாக்காளர்கள் நீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாடியா மாவட்டத்தில் மட்டும், 78 சதவீத பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது பா.ஜ.,வுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெண்கள் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. திருத்தத்திற்கு முன், 1,000 ஆண்களுக்கு 959 பெண்கள் என இருந்த விகிதம், திருத்தத்திற்கு பின், 950 ஆக குறைந்துள்ளது. மம்தாவின் முக்கிய பலமான பெண் வாக்காளர்களின் செல்வாக்கை கணிசமாக குறைக்கும்.

ஏறத்தாழ, 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் வாக்காளர்கள் பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. 2021 தேர்தலில், 45 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும், 20 தொகுதிகளில் பா.ஜ.,வும், 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றன. எனவே, இந்த தேர்தலில் ஓட்டு போடுபவர்களை விட, நீக்கப்பட்டவர்களே வெற்றியாளரை தீர்மானிப்பவர்களாக இருப்பர்.

Source link