கொல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஆட்சியில் இருந்து அகற்ற, ஆம் ஜனதா உன்யன் கட்சி தலைவர் ஹுமாயுன் கபீர், பா.ஜ.,வுடன், 1,000 கோடி ரூபாய் பேரம் பேசியதாக வீடியோ வெளியான நிலையில், அக்கட்சி உடனான கூட்டணியை ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி முறித்துள்ளது.
மேற் கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான ஹுமாயுன் கபீர், கடந்த ஆண்டு டிசம்பரில், ‘பாபர் மசூதியை மீண்டும் கட்டுவேன்’ என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, திரிணமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர், ஆம் ஜனதா உன்யன் என்ற கட்சியை துவக்கினார். இந்த தேர்தலில் மொத்தமுள்ள, 294 தொகுதிகளில், 182ல் இந்த கட்சி களம் காண்கிறது. ஹைதராபாத் தொகுதி எம்.பி., அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி உடன், ஹுமாயுன் கபீரின் ஆம் ஜனதா உன்யன் கட்சி கூட்டணி வைத்திருந்தது.
சமீபத்தில், ஹுமாயுன் கபீர் பேசியதாக ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் திரிணமுல் காங்., வெளியிட்டது. அதில், ‘முதல்வர் மம்தா பானர்ஜியை ஆட்சியில் இருந்து அகற்ற எந்த எல்லைக்கும் செல்வேன். இதற்காக பா.ஜ.,விடம், 1,000 கோடி ரூபாய் பேரம் பேசி உள்ளேன்.
‘முன்பணமாக, 200 கோடி ரூபாய் வாங்கி விட்டேன்’ என, ஹுமாயுன் கபீர் கூறுவது போல் உள்ளது. இந்த வீடியோ மேற்கு வங்க தேர்தல் களத்தில் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில், மேற்கு வங்க சட் டசபை தேர்தலில் ஆம் ஜனதா உன்யன் கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி நேற்று அறிவித்தது. ‘முஸ்லிம்களின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் நபர்களுடன் கூட்டணி வைக்க முடியாது’ எனக் குறிப்பிட்ட அ க்கட்சி, தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்த வீடியோவை மறுத்த ஹுமாயுன் கபீர், ”திரிணமுல் காங்., வெளியிட்ட வீடியோ போலியானது. அது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. கூட்டணியில் இருந்து ஓவைசி விலகி உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை. அவரை நம்பி நான் கட்சி துவங்கவில்லை. 100 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்றார்.
எந்த சம்பந்தமும் இல்லை!
ஹுமாயுன் கபீரின் வீடியோவுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருடன் நாங்கள் எந்த பேச்சும் நடத்தவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜி இது போல, 2,000 வீடியோக்களை கூட தயாரிப்பார்.
– அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
