கொல்லம்: ” வன்முறையால் எதையும் பெற முடியாது. இழப்பு மட்டுமே ஏற்படும்,” என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசினார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: என்னை பொறுத்தவரை நாராயண குரு போன்றவர்கள் வழிகாட்டிகள். அவர்கள் ஆசிரியர்கள். எந்த திசையில் நாம் நகர வேண்டும் என அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை மஹாத்மா காந்தி எதிர்த்து போராடியது எவ்வளவு குறிப்பிடத்தக்கது என்று எனக்குள் நான் நினைத்து கொண்டேன்.அவர் நாராயண குருவால் ஈர்க்கப்பட்டவர். அவரின் வார்த்தைகளை பின்பற்றினார். உலகின் வலிமையான அமைப்பை எதிர்த்து போராடினார்.அவருக்கு எதிராக அந்த அமைப்பு எது செய்தாலும் மஹாத்மா காந்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை.
பலத்துக்கும், அதிகாரத்துக்கும் வித்தியாசம் உள்ளது. ஆங்கிலேயர்களிடம் அதிகாரம் இருந்தாலும், பலம் இல்லை. மஹாத்மா காந்தியிடம் அதிகாரம் இல்லை. ஆனால் உண்மை இருந்தது. இதனால், அவரிடம் பலம் கிடைத்தது. நாராயண குருவிடம் பலம் அல்லது அதிகளவு சொத்து இல்லை. என்றாலும், கேரளாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக திகழ்ந்தார். நூறு ஆண்டுகளுக்கு பிறகு அவரை நினைவு கூற அரசியல்வாதிகள் வந்துள்ளனர் என்றால், நாராயண குருவின் பலத்தை கற்பனை செய்து வேண்டும்.
வன்முறையை பயன்படுத்துவோருக்கு மஹாத்மா காந்தி மற்றும் நாராயண குருவிடம் ஒரு தெளிவான செய்தியை சொல்லி உள்ளனர். வன்முறையால் எதையும் பெற முடியாது. இழப்பு மட்டுமே ஏற்படும். இந்தியாவிலும் அதேபோன்ற அரசியல் போராட்டம் நடக்கிறது. ஒரு புறம் உண்மை, மனித நேயம் மற்றும் அஹிம்சை உள்ளது.
மறுபுறம் கோபம், வன்முறை, வெறுப்புணர் மற்றும் ஆணவம் உள்ளது. அவர்களிடம் அதிகாரம் இருக்கலாம். ஆனால், பலம் இல்லை. அஹிம்சை உணர்வு மற்றும் உண்மை ஆகியவற்றை இந்தியாவின் ஆன்மா அடிப்படையாக கொண்டுள்ளது. அரசியலாக இருந்தாலும், சர்வதேச உறவுகளாக இருந்தாலும் சரி மற்றவர்களை புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கருத்து வேறுபாடுகள் காரணமாக வன்முறை ஏற்படுகிறது.
நமது அரசியல், சர்வதேச உறவுகளில் அனைவரும் இருளை நோக்கி ஓடி, ஞானத்தில் இருந்து விலகி செல்வதை காண்கிறோம். மற்றவர்களை புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களை குண்டுவைத்து கொன்று விடுவீர்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.
