தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் மு.க.ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, தேர்தல் முடிந்த பின்னர் ‘சீல்‘ வைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த EVM-கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த பணிகள் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.
ஆய்வின் போது திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு ஆகியோரும், த.வெ.க. சார்பில் வழக்கறிஞர் அருண் மற்றும் வி.எஸ்.பாபுவின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது, தேர்தலுக்கு பிறகு வேட்பாளர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட EVM-களை ஆய்வு செய்வது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையாகும். அதன்படி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆய்வுப் பணிகள் இன்று முதல் ஏழு நாட்கள் நடைபெறவுள்ளன. தினமும் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்படும். இதேபோல், புகார்கள் பெறப்பட்டுள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் EVM சரிபார்ப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
