கொழும்பு: உலகெங்கும், எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை அரசு பொது நிறுவனங்களுக்கு

கொழும்பு: உலகெங்கும், எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை அரசு பொது நிறுவனங்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்த போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, நம் அண்டை நாடான இலங்கை, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை வாரத்தில், நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும். ஏற்கனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்களாக உள்ளன. தற்போது புதன்கிழமையும் சேர்ந்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், துறைமுகங்கள், அவசர உதவி போன்றவை வழக்கம்போல் தொடரும். மேலும், தேசிய எரிபொருள் பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் பதிவு செய்து, குறிப்பிட்ட அளவு எரிபொருள் மட்டுமே பெற முடியும். தனியார் துறையும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்குமாறும், வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கவும் அரசு வலியுறுத்தியுள்ளது.

‘கடந்த 2022ல், பொருளாதார நெருக்கடி காரணமாக, கடுமையான எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பொது அமைதியின்மை ஏற்பட்டது. அதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என, அதிபர் அனுர குமார திசநாயகே கூறியுள்ளார். தொடர்ச்சியாக அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதை தவிர்க்கவே வாரத்தின் மைய நாளை தேர்வு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link