கொழும்பு: ஏர்பஸ் ஊழல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு ரூ.6 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபராக மஹிந்த ராஜபக்சே இருந்த போது, ஏர்பஸ் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில், மஹிந்த ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த சூழலில், 2011 -2015 காலகட்டத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த கபில சந்திரசேன, கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அப்போது, நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலம் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மஹிந்த ராஜபக்சேவுக்கு ரூ.6 கோடி லஞ்சம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். தலா ரூ.2 கோடி வீதம் மூன்று தவணைகளில் இந்தத் தொகையை கொடுத்ததாகவும், ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரியங்கர ஜெயரத்னவுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ல் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு அமைந்தவுடன், இலங்கையில் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டது. இதன்பிறகு, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், இந்த ஏர்பஸ் வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
