கோட்டயம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன், அவரது உடல்நலக் குறைவை ஆராய மருத்துவ குழு

கோட்டயம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன், அவரது உடல்நலக் குறைவை ஆராய மருத்துவ குழு அமைத்த கேரள அரசின் நடவடிக்கையில் சதி இருந்ததாக அவரது மனைவி மரியம்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள முதல்வராக இருமுறை பதவி வகித்தவருமான உம்மன் சாண்டி, 79, தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். கர்நாடகாவின் பெங்களூரில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், 2023 ஜூலை 18ல் உயிரிழந்தார்.

முன்னதாக, உம்மன் சாண்டி உடல்நலக் குறைவுடன் இருந்தபோது, முறையான சிகிச்சை அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ஆறு பேர் அடங்கிய மருத்துவ குழுவை, மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு நியமித்தது சர்ச்சையானது.

இதற்கிடையே, ஏப்.9ம் தேதி கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உம்மன் சாண்டியின் மனைவி மரியம்மா அங்குள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கேரள அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

என் கணவருக்கு தொண்டை சார்ந்த பிரச்னை மட்டுமே இருந்தது.

ஆனால் அரசு தரப்பு, யாரோ ஒருவர் அளித்த புகாரின்படி என் கணவரிடமோ, என்னிடமோ அல்லது நெருங்கிய குடும்பத்தினரிடமோ கலந்து ஆலோசிக்காமல் மருத்துவ குழுவை அமைத்தது.

இது, என் மகன் சாண்டி உம்மனை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம். இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருந்தது. கேரள அரசின் நடவடிக்கையால், மனதளவில் காயமடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனினும், உறவினர்கள் எழுப்பிய இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, அப்போதே, உம்மன் சாண்டி தன் மகனின் சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு, தன் குடும்பத்தினரும் கட்சியினரும் தன்னை சிறந்த முறையில் கவனித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். உம்மன் சாண்டி போட்டியிட்ட புதுபள்ளி தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக அவரது மகன் சாண்டி உம்மன் உள்ளார். வரும் சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் காங்., சார்பில் அவர் களமிறங்க உள்ளார்.

Source link