கோட்டா: ராஜஸ்தானில், எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள்

கோட்டா: ராஜஸ்தானில், எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தானின் கோட்டா பகுதியில், 2018ல் வசித்தவர் இஸ்தியாக் ஹூசைன். இவரது அண்டை வீட்டில் வசிக்கும் ரம்ஜானிக்கு சொந்தமான இடத்தில், இஸ்தியாகின் ஆடு மேய்ந்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், 2018 ஆகஸ்ட் 31ம் தேதி, சமரச தீர்வு காண பேச்சு நடத்தும்படி ரம்ஜானி குடும்பத்தார் இஸ்தியாகை அழைத்தனர்.

இதற்காக தன் நண்பர்களுடன் பொது இடத்திற்கு இஸ்தியாக் சென்றபோது, ரம்ஜானி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். இதில் இஸ்தியாக் ஹூசைன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரம்ஜானி, அவரது மனைவி பர்ஜானா, இரண்டு மகன்கள் என 12 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளாக நடந்த விசாரணை முடிந்து, நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில், குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டதால், ரம்ஜானி குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன், அனைவருக்கும் தலா 13,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Source link