கோதாவரி: ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
எலூரு மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் என்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் அமராவதியில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். யுகாதி பண்டிகையை கொண்டாட எண்ணினர். அந்த வகையில் அவர்கள் 7 பேரும் எடப்பாக்கா மண்டலத்தில் புருஷோத்தப்பட்டினம் அருகே உள்ள கோதாவரி ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
ஆற்றில் இறங்கி அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆற்றின் வேகம் அதிகரிக்கவே 5 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 2 பேருக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர்கள் நீந்தி பாதுகாப்பாக கரையேறினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். பின்னர் உள்ளுர் மக்களின் உதவியுடன் அவர்கள் படகில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
அவர்கள் பெயர் மற்றும் ஊர் விவரம் வருமாறு;
ஸ்ரீகர் – பத்ராசலம், தெலுங்கானா
அபிராம் – விஜயநகரம்
நவ்தீப் – உய்யூரு, கிருஷ்ணா மாவட்டம்
இவர்களுடன் சதீஷ்குமார், தேஜா ஆகிய மாணவர்களின் சடலங்ளும் கண்டெடுக்கப்பட்டன. கரையேறி உயிர் பிழைத்த சந்தூரி தீபக் மற்றும் கத்தாம் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் மூலம் பலியானவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் விவரத்தை தெரிவித்தனர்.
மாணவர்கள் 5 பேர் கோதாவரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில் அரசு துணை நிற்கும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதி அளித்துள்ளார்.
