ஜோகனஸ்பர்க்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் ஆறுதல் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க அணி, தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. மழையால், தலா 16 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ஓவரில், 66/1 ரன் எடுத்திருந்த போது மழை, மோசமான வானிலையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. பின், 10 ஓவர் கொண்ட போட்டியாக நடந்தப்பட்டது. கேப்டன் ஷாய் ஹோப் (48), ஷிம்ரன் ஹெட்மயர் (48) நம்பிக்கை தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 114/3 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (28), ஜேசன் ஸ்மித் (26), டிவால்டு பிரவிஸ் (17), ஜார்ஜ் லிண்டே (17) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்க அணி 10 ஓவரில் 118/6 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கார்பின் போஷ் (2) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 3 விக்கெட் சாய்த்த குடகேஷ் மோடி, ஆட்ட நாயகன் விருது வென்றார். தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (143 ரன்) வென்றார்.
