கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா: நியூசிலாந்து அணி ஏமாற்றம்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 5வது ‘டி-20’ போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-2 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

நியூசிலாந்து சென்ற தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சமநிலையில் இருந்தது. கிறைஸ்ட்சர்ச்சில் 5வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்க அணிக்கு வியான் முல்டர் (31), ரூபின் ஹெர்மன் (39) நம்பிக்கை தந்தனர். அபாரமாக ஆடிய கானர் எஸ்தர்ஹியுசன், 33 பந்தில் 75 ரன் (6X6, 5X4) விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/4 ரன் எடுத்தது. தியான் (21), ஜேசன் ஸ்மித் (1) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பென் சியர்ஸ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் (25), டேன் கிளீவர் (22), பெவன் ஜேக்கப்ஸ் (36), ஜேம்ஸ் நீஷம் (24) ஆறுதல் தந்தனர். நிக் கெல்லி (14), ஜோஷ் கிளார்க்சன் (13) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 154/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஜெரால்டு கோயட்சீ, பார்ட்மன், வியான் முல்டர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தென் ஆப்ரிக்காவின் எஸ்தர்ஹியுசன் வென்றார்.

Source link