கோப்பை வென்றார் ஜானிக் சின்னர்: மயாமி ஓபனில் சாதனை

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இத்தாலியின் ஜானிக் சின்னர், செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா மோதினர். ஒரு மணி நேரம், 33 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, இத்தொடரில் இவர் கைப்பற்றிய 2வது பட்டம். ஏற்கனவே 2024ல் கோப்பை வென்றிருந்தார். தவிர இவர், ஏ.டி.பி., ஒற்றையரில் தனது 26வது பட்டத்தை தட்டிச் சென்றார்.

எட்டாவது வீரர்: சமீபத்தில் இந்தியன் வெல்ஸ் ஓபனில் கோப்பை வென்ற சின்னர், ஒரு சீசனில் இந்தியன் வெல்ஸ், மயாமி ஓபனில் சாம்பியன் பட்டம் (‘சன்ஷைன் டபுள்’) கைப்பற்றிய 8வது வீரரானார். ஏற்கனவே அமெரிக்காவின் ஜிம் கூரியர் (1991), மைக்கேல் சாங் (1992), பீட் சாம்பிராஸ் (1994), சிலியின் மார்சிலோ ரியோஸ் (1998), அமெரிக்காவின் ஆன்ட்ரி அகாசி (2001), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (2005, 2006, 2017), செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (2011, 2014-16) ஆகியோர் இப்படி சாதித்திருந்தனர்.

முதல் வீரர்: தொடர்ச்சியாக மூன்று ஏ.டி.பி., ‘மாஸ்டர்ஸ் 1000’ அந்தஸ்து பெற்ற தொடரில் (பாரிஸ்-2025, இந்தியன் வெல்ஸ்-2026, மயாமி-2026), ஒரு செட் கூட இழக்காமல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் சின்னர்.

Source link