கோல்கட்டா: ‘இண்டி கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தான் தலைவராக வேண்டும். ராகுல் விட்டுக் கொடுக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வலியுறுத்தியுள்ளார்.
கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; இண்டி கூட்டணியின் தலைமைப் பொறுப்பை மாநில கட்சிகளின் தலைவர்களிடம் ராகுல் விட்டுக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டணிக்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா தான் தலைவர். அவர் இல்லையேன்றால் இந்தக் கூட்டணியே இருக்காது. அவரைத் தவிர்த்து இண்டி கூட்டணியின் தலைவராக ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி உள்ளிட்ட வேறு யாரேனும் பொறுப்பேற்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து கூறியதற்காக, மணிசங்கர் அய்யரை முன்பு ராகுல் சஸ்பெண்ட் செய்திருந்தார். இந்த சூழலில் இது போன்ற கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
மணிசங்கர் அய்யரின் இந்தக் கருத்துக்கு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் சுமன் ராய் சவுத்ரி கூறுகையில், ‘ தொடக்கத்திலேயே ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் நீண்ட காலமாக ஈடுபடுவதில்லை. மேற்கு வங்கத்தில் தற்போது 5 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. மணிசங்கர் அய்யரின் இத்தகைய கருத்துக்கு அதுதான் காரணமா? என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்,’ என்றார்.
