கோவிலை ஒட்டியுள்ள மீன் சந்தையை மூட பாஜக மிரட்டுவதாக மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி சித்தரஞ்சன் பூங்கா பகுதியில் உள்ள பெங்காளிகள் மீன் சந்தையை மூடச் சொல்லி பாஜகவினர் மிரட்டுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு காட்சிப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், காவி உடை அணிந்த இருவர், கடைக்காரர்களிடம் கடைகளை மூடுமாறு வலியுறுத்துவது பதிவாகியிருந்தது. கோவிலை ஒட்டி அமைந்த மீன் சந்தை, கோவிலின் புனிதத்தன்மையைச் சிதைப்பதாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அந்தக் காணொளியில் தோன்றுபவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து டிஎம்சி எம்பி மஹுவா தனது சமூக வலைதளத்தில், “டெல்லியின் சித்தரஞ்சன் பூங்காவில் மீன் உண்ணும் பெங்காளிகளை, காவிப் படையைச் சேர்ந்த பாஜக குண்டர்கள் மிரட்டுவதை தயவுசெய்து பாருங்கள். கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்று நடந்ததே இல்லை என்று அங்கு குடியிருப்போர் கூறுகின்றனர். பாஜக குண்டர்கள் உரிமை கொண்டாடும் சித்தரஞ்சன் பூங்கா கோவிலை, அந்த மீன் சந்தை வியாபாரிகள் தான் கட்டினர். இதை வழிபடுபவர்களும் அவர்களே. பெரிய பூஜைகளும் அங்கே நடைபெறுகின்றன. டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகின்றன. இது ஒரு ‘சிறந்த’ பரிசு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link