திருப்போரூர்: திருப்போரூர் கோவில் திருவிழா அழைப்பிதழில் வரும் காலங்களில் ஜாதி பெயர் விபரத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் மாசி பிரம்மோற்சவம் விழா நாளை மறுநாள் 21 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரதான விழாவான தேர்திருவிழா 27 ம் தேதியும், மார்ச் 2ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும், 5 தேதி காலை திருக்கல்யாண வைபவத்துடனும் விழா நிறைவடைகிறது.
இந்நிலையில்,கோவில் விழா அழைப்பிதழில் உபயதாரர்கள் விபரத்தில் ஜாதி பெயர் அச்சடிப்பதை தவிர்ப்பது தொடர்பாக திருப்போரூர் பகுதியை சேர்ந்த வி.சி.க., பிரமுகர் சமரன் என்பவர் கடந்த 17 ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது: ஜாதி பெயர்கள் கொண்ட அழைப்பிதழ்களை திரும்பப் பெற செய்து, ஜாதி அடையாளங்கள் இல்லாத புதிய அழைப்பிதழ்கள் வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எங்கள் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு தேர் வருவதை இனி அழைப்பிதழில் குறிப்பிடப்பட வேண்டும். உபயதாரர் பட்டியலில் அனைத்து சமூக மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி, ஆதிதிராவிடர் மக்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.பாரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்தது. அதில், உபயதாரர்கள் தங்களின் பெயர்களுடன் ஜாதிப் பெயர்களை வழங்கும்போது, ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தவிர்க்கப்பட வேண்டும். இந்த ஆண்டிற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு விட்டதாலும், விழா நாளை தொடங்கவுள்ளதாலும், இந்த ஆண்டிற்கு எந்த உத்தரவும் வழங்க இயலாது.
அடுத்தடுத்த விழாக்களில் இருந்து, உபயதாரர்களின் ஜாதியை நீக்கி, பெயரை மட்டும் அச்சிட வேண்டும். அரசுத் துறை இணைந்து நடத்தும் ஒரு விழா ஜாதியைப் பிரசாரம் செய்யும் வகையில் அல்லது ஜாதியை விளம்பரப்படுத்தும் வகையில் நடத்தப்படுவது அனுமதிக்க முடியாது.
எனவே, அடுத்தடுத்த விழாக்களில் இருந்து, எந்தவொரு அறிவிப்பு அல்லது துண்டுப் பிரசுரம் அச்சிடும்போது, உபயதாரரின் பெயரை மட்டும் அச்சிடப்பட வேண்டும். ஜாதிப் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என உத்தரவிடப்படுகிறது.
எந்த கோவிலிலும் உற்சவர் ஊர்வலம் நடைபெறும் போது, சிலைகளை துாக்கி செல்ல தன்னார்வலர்கள் இருப்பார்கள். அதை போன்று உடல் வலிமை கொண்ட பக்தர்களைக் கொண்டு பாதம்தாங்கி குழு அமைத்து மேலாண்மை செய்ய, கோவில் செயல் அலுவலருக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
