மதுரை: ‘கோவில் நிலம் தொடர்பான வழக்குகளை கையாளும் சிவில் நீதிமன்றங்கள், அவற்றுக்கு 6 மாதங்களில் தீர்வு காண வேண்டும்’ என, உயர் நீதிமன்றம் வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக, சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீது, நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசியல் தலைவர்கள், பிறரின் போராட்டங்கள் காரணமாக, கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை.
போராட்டம்
ஆக்கிரமிப்பாளர்களில், 27 பேர் அரசு அதிகாரிகள், 49 பேர் தொழிலதிபர்கள், 38 பேர் செல்வாக்குமிக்கவர்கள்.
அவர்களின் சமூக, அரசியல் நிலையே, இந்நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகளால் நிறைவேற்ற முடியாமல் தயங்குவதற்கு காரணமாக இருக்கக் கூடும் என்ற கவலைக்கிடமான விஷயத்தை புறக்கணிக்க முடியாது.
ஏழை கடவுளுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால், வலிமைமிக்க ஆக்கிரமிப்பாளர்களிடம் மதிப்புமிக்க ஓட்டுரிமை உள்ளது.
சட் டத்தின் கீழ் சட்டப்பூர்வ நபராக அங்கீகரிக்கப்பட்ட கடவுள், தேர்தல்களில் பங்கேற்கவில்லை என்பதற்காக, அதை எந்த நிவாரண பாதுகாப்பும் இன்றி விட்டுவிட முடியாது. கடவுள் ஓட்டுப்பதிவு செய்யாமல் இருக்கலாம்; ஆனால், அரசியல மைப்பு பேசுகிறது.
இந்நீதிமன்றம், மக்களின் நலனை பாதுகாக்க தன் அதிகாரத்தை பயன்படுத்தி செயல்படுகிறது.
நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு அமைப்பு ரீதியான எதிர்ப்பினால் தடை ஏற்படுத்தும் போது, சட்டத்தின் ஆட்சி தானே சோதனைக்குள்ளாகிறது.
சில அமைப்புகள் போராட்டங்களை ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இப்போராட்டங்களில் பங்கேற்றவர்களில் சிலர், சட்டத்துறையில் உள்ளவர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருப்பது மிக வருந்தத்தக்க நிலையாகும்.
அவமதிப்பு
இந்த அவமதிப்பு வழக்கை கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களுடன் இந் நீதிமன்றம் முடித்து வைக்கிறது.
கோவில் நிலம் தொடர்பான வழக்குகளை கையாளும் சிவில் நீதிமன்றங்கள், அவற்றிற்கு முடிந்தவரை விரைவாக, முன்னுரிமை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
மீட் கப்பட்ட நிலம், துவங்கிய நடவடிக்கைகள், தாக்கல் செய்த சிவில் வழக்குகள், வழக்கின் நிலை மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளை, இந்நீதிமன்றத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டு ம்.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதை கரூர் எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும்.
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் நடவடிக்கைக்கு எதிராக போராடிய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, சங்கங்களின் பதிவாளர் விசாரித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது விருப்புரிமைக்குரிய விஷயம் அல்ல என்பது அதிகாரிகளுக்கு நினைவூட்டப்படுகிறது. நீதிமன்றத்தின் அதிகாரம், நிர்வாகத்தின் வசதியை சார்ந்ததல்ல. மாநில அரசின் நிர்வாக இயந்திரம் உறுதியாகவும், அரசியலமைப்பிற்கு உண்மையுடன் செயல்பட வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு உத்தர விட்டனர்.
இணையதளத்தில் இனி கோவில் நிலம் விபரம்
கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் குத்தகை தொடர்பான ஒரு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விபரங்களை, அதாவது நிலத்தின் பரப்பளவு, குத்தகைக்காலம், குத்தகைதாரர்கள், குத்தகை தொகையை அறநிலையத்துறை தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இத்தகவல்கள் மக்கள் எளிதில் பெறக்கூடியதாக இருக்க வேண்டும். இதன் மூலம், அச்சொத்துக்களில் ஆர்வம் உள்ளவர்கள் பொது ஏலத்தில் பங்கேற்க முடியும். இதனால் அச்சொத்துகளுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
சட்டம் , விதிகளை கடுமையாக அறநிலையத்துறை பின்பற்ற வேண்டும். இவ்வழக்கில் காணப்படுவது போல் கமிஷனரின் அனுமதி இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்த குத்தகைதாரர்களிடமும் கோவில் சொத்துக்கள் இல்லாமல் இருப்பதை உறுதி வேண்டும். மேலும், மத நிறுவங்களின் அசையா சொத்துக்களின் குத்தகை விதிகள்படி, அச்சொத் துக்களை பொது ஏலம் மூலம் மட்டுமே குத்தகைக்கு வி டப்படுவதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும்.
இம்மனுதாரரிடமிருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
