கோவை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணிக்கும், திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பதில் இருகட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்திருப்பது 10 தொகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டம் தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடியது, மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய திமுகவுக்கு நெருடலை ஏற்படுத்தியது.
அதன் பிறகு தான் மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்தது. தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.
இதனால் வரவிருக்கும் தேர்தல் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை வேலுமணிக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையிலான நேரடி மோதலாக கருதப்படுகிறது.
தங்கள் செல்வாக்கை தக்க வைக்க, இருவரும் முடிந்த அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்துவர் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். திமுக சார்பில் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் எவர்சில்வர் அண்டா தரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கொலுசு கொடுத்து சாதித்ததை சட்டசபை தேர்தலில் அண்டா கொடுத்து சாதிக்க முடியாது என்கின்றனர் அதிமுகவினர். வரும் நாட்களில் இருவருக்கும் ஆன தேர்தல் மோதல் உக்கிரம் அடையும் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.
தொகுதி – 2016 (மார்ஜின்) – 2021 (மார்ஜின்)
கோவை தெற்கு – 17,419 (அதிமுக) – 1,728 (பாஜ)
கோவை வடக்கு – 7,724 (அதிமுக) – 4,001 (அதிமுக)
சிங்காநல்லூர் – 5,180 (திமுக) – 10,854 (அதிமுக)
தொண்டாமுத்தூர் – 64,041 (அதிமுக) – 41,630 (அதிமுக)
கவுண்டம்பாளையம் – 8,025 (அதிமுக) – 9,776 (அதிமுக)
மேட்டுப்பாளையம் – 16,114 (அதிமுக) – 2,456 (அதிமுக)
கிணத்துக்கடவு – 1,332 (அதிமுக) – 1,095 (அதிமுக)
பொள்ளாச்சி – 13,360 ( அதிமுக) – 1,725 (அதிமுக)
வால்பாறை – 8,244 (அதிமுக) – 12,223 (அதிமுக)
சூலூர் – 36,631 (அதிமுக) – 31,932 (அதிமுக)
