கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!

கோவை: முக்கால் நூற்றாண்டு காலமாக கண்டிராத ஒரு காட்சியை, கோவை நகர மக்கள் இன்று பார்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடிகள் பறக்காத முதல் சட்டசபை தேர்தல் இது தான்.

இதனால் காம்ரேடுகள் என தோழமையுடன் அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மனம் உடைந்து போயிருக்கிறார்கள். தி.மு.க. மீது அவர்கள் வெளிப்படையாக காட்ட முடியாத கோபத்தில் தகிக்கிறார்கள். பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போல காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அடிமட்ட தொண்டர்கள் குமுறலை கொட்டி தீர்க்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டுமே தி.மு.க. கூட்டணியில் உள்ளன.இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகளை தி.மு.க. வழங்கியது. இரட்டை இலக்கத்தில், அதாவது 10 தொகுதியாவது கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதற்கு துாண்டுதலாக இருந்தது, விஜயகாந்த் இல்லாத தே.மு.தி.க.வுக்கு கிடைத்த 10 தொகுதிகள்.

ஆனால், தி.மு.க. சொன்ன கணக்கு வேறு. ‘கடந்த தேர்தலில் உங்களுக்கு தலா 6 தொகுதி கொடுத்தோம். நீங்கள் தலா 2 இடம் தான் ஜெயிக்க முடிந்தது. இருவருடைய ஓட்டுகளையும் சேர்த்தால் 2 சதவீதம் கூட தேறவில்லை. இந்த அளவுக்கு பலவீனமாகி விட்ட உங்களுக்கு தலா 5 தருவதே பெரிய விஷயம்’ என்று விளக்கம் கொடுத்தது.

அந்த வாதத்துக்கு தோழர்களிடம் பதில் இல்லை. பிரேமலதா தலைமை தாங்கும் கட்சிக்கு மட்டும் 10 எப்படி கொடுத்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லக்கூட அறிவாலயத்தில் எவரும் தயாராக இல்லை. சரி, கேட்கும் தொகுதியாவது கிடைக்குமா என்றால், அங்கேயும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், வால்பாறை தொகுதியை இ.கம்யூனிஸ்டும், சிங்காநல்லுார் தொகுதியை மா.கம்யூனிஸ்டும் கேட்டன. தி.மு.க. மறுத்து விட்டது. சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம் தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது.

கோவை கிழக்கு தொகுதியில் மா.கம்யூ. 5 முறையும், பேரூர், சிங்காநல்லுார் தொகுதிகளில் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. வால்பாறையில் இ.கம்யூ. 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அசைக்க முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வந்த கம்யூ. தொழிற்சங்கங்கள் படிப்படியாக பலம் இழந்து இன்று பலவீனப்பட்டு நின்றாலும், தொழிற்சாலைகள் மிகுந்த கோவையின் தொழிலாளர் வர்க்கத்துக்கு, செங்கொடி மீதான அபிமானம் அற்றுவிடவில்லை.

”கவுன்சிலர் ஆனதுமே ஒரு கோடி ரூபாய் கார் வாங்கும் மற்ற கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் ஒப்பிடும்போது, கம்யூனிஸ்ட் தோழர்கள் பதவிக்கு வந்தாலும் எளிமையாக பழகுகிறார்கள். பணத்துக்கும் அதிகாரத்துக்கும் விலை போவது இல்லை. அதனால் அவர்கள் மேல் நம்பிக்கை நசியவில்லை” என்கின்றனர்.

இதுபோன்ற உழைப்பாளிகளுக்கு, தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக கோவையில் ஒரு தொகுதியில் கூட கம்யூ., கட்சிகள் போட்டியிடவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

தொழில் பூமியான கோவை மண்ணில் கம்யூனிஸ்ட்களின் 74 ஆண்டுகால அரசியல் வரலாற்று தடம் தி.மு.க.வால் மண்மூடி மறைக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டம் என்கின்றனர். 1950 மற்றும் -1960 களில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த கம்யூ., கட்சி, மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள், திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, காலப்போக்கில் கரைந்து இந்த நிலைக்கு வந்துள்ளது.

1952, 57ல் சட்டசபையில் அக்கட்சிக்கு 63 உறுப்பினர்கள் இருந்தனர். கோவை லோக்சபா தொகுதியை 5 முறை இ.கம்யூனிஸ்டும், 3 முறை மா.கம்யூனிஸ்டும் வென்றுள்ளன.

ஒவ்வொரு தேர்தலிலும் செங்கொடியை உயர்த்தி பிடித்து, அரிவாள் சுத்தியல் அல்லது கதிர் அரிவாள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பழக்கப்பட்ட தோழர்களை இம்முறை உதய சூரியனுக்கும், கை சின்னத்துக்கும்ஆதரவு திரட்டும் நிலைக்கு தி.மு.க. கொண்டு வந்துள்ளது. மதவாத சக்தியான பா.ஜ.வை தடுத்தாக வேண்டும் என்ற கோஷத்தை முன்னிறுத்தி தி.மு.க. இதை சாதித்துள்ளது.

கம்யூ.,நிர்வாகிகள் இந்த தலைகுனிவை விழுங்கி ஜீரணித்தாலும், தொண்டர்கள் மட்டத்தில் தோழமையையும் ஒத்துழைப்பையும் தி.மு.க. எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள். கோவையை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றும் பொறுப்பை கேட்டு வாங்கியுள்ள செந்தில் பாலாஜிக் கும், இந்த உண்மை தெரிந்துதான் இருக்கிறது.

நடந்ததும்…நடப்பதும்!

2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ. வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்ற இந்தியாவின் ஒரே கம்யூனிஸ்ட் எம்.பி. என்கிற பெருமை நடராஜனுக்கு சென்றது. கம்யூனிஸ்ட்கள் வலுவாக உள்ள கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் கூட இது நடக்கவில்லை. தொழிலாளர்கள் நிறைந்த சிங்காநல்லுார் எப்படியும் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் கம்யூனிஸ்டுகள் இருந்தபோது, எதிர்பாராத விதமாக அதை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளார் ஸ்டாலின். சிங்காநல்லுாரில் காங்கிரஸ் 5 முறை போட்டியிட்டு (1967, 71, 84, 89, 2011) ஒரு தடவை கூட ஜெயிக்கவில்லை. மார்க்சிஸ்ட் 2 முறை (1977, 2001) வென்றுள்ளது. தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் உள்ள அமைச்சர் எ.வ. வேலு சிங்காநல்லுார் தொகுதியை தனது ஆதரவாளரான தி.மு.க. தீர்மான குழு செயலர் நா. கார்த்திக்குக்கு கேட்டுள்ளார். அதற்கு தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி முட்டுக் கட்டை போட்டுள்ளார். அந்த கடுப்பில் காங்கிரஸ் கட்சிக்கு தள்ளிவிட்டதாக ஒரு தகவல் உள்ளது.

தலைவர்கள் சொல்வதென்ன?

மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம்: சிங்காநல்லுார், திருப்பூர் தெற்கு கேட்டோம். கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தந்ததே 5 தான். அனைத்து மாவட்டங்களிலும் எப்படி போட்டியிட முடியும்? இ.கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன்: வால்பாறை, திருப்பூர் வடக்கு கேட்டோம். கிடைக்கவில்லை. அதற்காக முடங்க முடியாது. கூட்டணிக்காக வேலை செய்தாக வேண்டும்.

Source link