கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளே 6 தொகுதிகளை கேட்பதால், தி.மு.க.,வினர் வருத்தமடைந்துள்ளனர். அதேநேரம், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என, உளவுத்துறை அறிக்கை கொடுத்திருப்பதால், கட்சியினர் ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.
கடந்த தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி வாய்ப்பு இழந்தது. இம்முறை, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தி.மு.க.,வினர் களமிறங்கியுள்ளனர். கொங்கு மண்டல பொறுப்பாளரான செந்தில் பாலாஜிக்கு, 39 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவரின் தேர்தல் வியூகத்தில், எப்படியும் ஜெயிக்க வைத்து விடுவார் என்ற எண்ணம் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணலில், ‘சீட்’ கேட்டு ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்து பங்கேற்றனர். இவர்களை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.இவர்களை போலவே, கூட்டணி கட்சிகளான மா.கம்யூ., இ.கம்யூ., காங்., மக்கள் நீதி மய்யம், கொ.ம.தே.க., தே.மு.தி.க., ஆகியவை, கோவை மாவட்டத்தில் போட்டியிட ஆர்வமாக உள்ளன.
மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை கூட்டணி கட்சிகளே கேட்பதால், தி.மு.க., நிர்வாகிகள் வருத்தமடைந்துள்ளனர். கூட்டணிக்கு தொகுதிகளை வழங்கினால், வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என நினைக்கின்றனர்; நேர்காணலிலும் இதையே வலியுறுத்தினர்.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கோவை தெற்கு தொகுதியில், காங்., 2 முறை போட்டியிட்டு தோற்றது. கமல் கட்சியும் கேட்கிறது;
கடந்த முறை கமல் போட்டியிட்டதால், அதிக ஓட்டுகள் வாங்கினார். அவரது கட்சி வேட்பாளருக்கு, அந்தளவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பது சந்தேகமே. சிங்காநல்லுார் தொகுதியில் ம.நீ.ம., ஓட்டு களை பிரித்ததால், தி.மு.க., தோற்றது. லோக்சபா தேர்தலில் அண்ணாமலை கணிசமான ஓட்டுகள் பெற்றார்.
அவர் தோற்றிருந்தாலும், ஏராளமான பூத்களில் அவரே அதிகமான ஓட்டு வாங்கியிருந்தார். தி.மு.க., இரண்டாமிடம், மூன்றாமிடத்துக்கு சென்றது. அவர் போட்டியிடுவதாக இருந்தால், கூட்டணி கட்சிக்கு தொகுதியை தராமல் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டியது அவசியம்.
தொண்டாமுத்துாரில், வேலுமணியை எதிர்கொள்ள வலுவான வேட்பாளர் தேவை என்பதால், தி.மு.க., வேட்பாளரையே நிறுத்த வேண்டும். கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது என, உளவுத்துறை அனுப்பிய அறிக்கையை கட்சி தலைமை கவனிக்க வேண்டும்.
ஏனெனில், கூட்டணி கட்சியினருக்கு தொகுதிக்குள் போதிய பலமில்லை; தி.மு.க.,வினர் வேலைபார்த்தே வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும்; அதற்குரிய செலவை செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினர் இணைந்து செயல்படாவிட்டால், வெற்றி பாதிக்கும்.
அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கினாலும், மீதமுள்ள 8 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும். எனவே கூட்டணிக்கு வழங்குவதை விட, தி.மு.க., வே நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
