கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கான விலை உயர்ந்த ஊசி மருந்து, கடந்த சில மாதங்களாகவேதட்டுப்பாடு இருப்பதால், பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவுக்கு மட்டும், தினமும் 300க்கும் மேற்பட்டோர், பரிசோதனைமற்றும் தொடர் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில், மருத்துவ புற்றுநோயியல் துறையில், கீமோதெரபி மூலம் வேகமாக வளரும் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை செயல்படாமல் தடுத்தல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி புற்றுநோய் செல்களை அழித்தல், ஹார்மோன் சமநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு, உயிர்காக்கும் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இவை விலையுயர்ந்தவை என்பதோடு, இலவசமாக கிடைப்பதால், ஏழை, நடுத்தர மக்களின், முதல் தேர்வாக அரசு மருத்துவமனைகளே உள்ளன.
இச்சூழலில், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கான விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும் ‘போர்டெசோமிப்’ (Brotezonib inj2mg) என்ற ஊசி மருந்து கடந்த மூன்று மாதங்களாக இல்லை என கூறி, நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், தனியார் மருந்தகங்களில் வாங்கி கொள்ள அறிவுறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட புற்றுநோயாளி ஒருவர் கூறுகையில்,’எனக்கு ரத்த புற்றுநோய் சிகிச்சைக்கு வாரந்தோறும் சில ஊசி மருந்துகள் செலுத்தப்படுகிறது. இதில், குறிப்பிட்ட மருந்து மட்டும் இல்லை என்பதால், கடந்த டிசம்பர்மாதம் முதல், எழுதி தருவதோடு, எங்கு வாங்கலாம் எனவும் நர்ஸ்கள் கூறுகின்றனர்.
இது 600 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கூலி வேலைக்கு செல்வோர், இம்மருந்தை எப்படி, இவ்வளவு பணம் கொடுத்து, வாரந்தோறும்வாங்க முடியும். உயிர்காக்கும் மருந்துகள் தீரும் போதே, முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ளாமல், நோயாளிகளை அலைகழிக்கின்றனர்,’ என்றார்.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ‘டீன்’ கீதாஞ்சலி கூறுகையில்,” உயிர்காக்கும் மருந்துகளை பொறுத்தவரை, அவ்வப்போது நோயாளிகளின் தேவைக்கேற்ப, இருப்பு வைக்கப்படுகிறது. தற்போது நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால், இக்குறிப்பிட்ட மருந்து மட்டும் இல்லை. தற்போதைய தேவைக்கு, 50 ஊசி மருந்துகள் வெளி மருந்தகங்களில் வாங்க முடிவெடுத்துள்ளோம். நோயாளிகளுக்கு இனி சிரமம் இருக்காது,” என்றார்.
