கோவை: கோவையில் காட்டூர் என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு, மகாத்மா காந்தியின் நினைவாக ‘காந்தி புரம்’ என பெயர் சூட்டப்பட்டது. இன்று வரை அப்படிதான் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
நஞ்சப்பா ரோட்டில் இருந்து காந்திபுரம் சந்திப்பை கடந்து, பாரதியார் ரோட்டுக்கு செல்லும் இடத்தில் சாலைத்தீவு திடல்கள் உள்ளன. அதில், 1978 ம் ஆண்டு லட்சுமி மில்ஸ் நிறுவனம் ராஜாஜி மார்பளவு சிலையை நிறுவியது. ராஜாஜி பிறந்த நாள், நினைவு நாள் வரும்போது சிலைக்கு லட்சுமி மில்ஸ் நிறுவனர் ஜி.கே.சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தார்.
சத்தி ரோட்டில் இருந்து வருபவர்கள் பாரதியார் ரோட்டுக்கு இடதுபுறம் திரும்பும் இடத்தில், ஈ.வெ.ராமசாமி முழு உருவ சிலை, 2001 ல் நிறுவப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்ததாக, கல்வெட்டில் சொல்லப்பட்டு உள்ளது. மாநகராட்சி அனுமதி பற்றி எந்த குறிப்பும் இல்லை.
நஞ்சப்பா ரோட்டில் மேம்பாலம் கட்டியபோது, வேலைகளுக்கு இடையூறு என்ற காரணத்தால், இரு சிலைகளையும் அகற்ற முடிவு செய்தனர். லட்சுமி மில்ஸ் நிர்வாகத்தினர், ராஜாஜி சிலையை அகற்றி, அவர்களது கம்பெனிக்கு கொண்டு சென்றனர். ஈ.வெ.ரா. சிலையை அகற்றிய திராவிடர் கழகத்தினர், பெரியார் படிப்பகம் அருகே நிறுவினர். கடந்த 10 ஆண்டுகளாக அங்கேயே இருந்தது.
கடந்த மாதம் திடீரென ஈ.வெ.ரா. சிலையை அங்கிருந்து எடுத்து, பிள்ளையார் கோவிலுக்கு எதிரே முன்பு ராஜாஜி சிலை இருந்த இடத்தில் வைத்தனர். கடவுள் இல்லை என்று கூறிய ஈ.வெ.ரா.வின் சிலையை கோவில்களுக்கு எதிரில் நிறுவுவது கருணாநிதி காலத்தில் நடந்தது. அதே பாணியில் தற்போது ஸ்டாலின் ஆட்சியில் விநாயகர் கோவில் எதிரில் ஈ.வெ.ரா. சிலையை வைத்துள்ளனர்.
அதே நேரம், ராஜாஜி சிலை எங்கும் வைக்கப்படவில்லை. காந்திபுரம் என பெயர் இருந்தாலும், காந்தி சிலை இப்பகுதியில் இல்லை. இடத்தை மாற்றி ஈ.வெ.ரா. சிலை வைக்க, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. கலெக்டர் பவன்குமாரிடம் கேட்டதற்கு, ”காந்திபுரம் சந்திப்பில் ஈ.வெ.ரா. சிலை நிறுவ அனுமதி கொடுக்கவில்லை. உள்ளாட்சி அமைப்பு மற்றும் காவல்துறையிடம் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
