கோவை: கோவை திமுகவை செந்தில்பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளார். கருரைச் சேர்ந்த 3 பேர் கோவை தெற்கில் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி; அனைவரும் தரத்துடன் விமர்சனத்தை வைக்க வேண்டும். அப்படித்தான் நாங்களும் வைக்கிறோம். மக்கள் அனைவரையும் பார்த்து வருகின்றனர். எல்லாரும் பேசும் வார்த்தைகளை ஓட்டு பெட்டியில் ஓட்டு போடும் போது மக்கள் மனதில் வைப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் ஒரு தரமான கூட்டணி தான்.
தாய்மார்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடிய கூட்டணி. பேசக்கூடிய வார்த்தைகள் தரமாகவும், எதிர்பார்ப்புக்கு மேலாகவும் தான் இருக்கும்.
கோவை லோக்சபாவில் யாருக்கும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் அரசியல் செய்வோம் என்று சொன்னோம். இன்றைக்கு நான் சவால் விடுக்கிறேன். கோவையில் திமுக 2024 தேர்தலை எப்படி எதிர்கொண்டது என்பது எல்லாருக்கும் தெரியும். தரமான அரசியலை செய்யக்கூடிய இடத்தில் இன்று நான் இருக்கிறேன்.
கோவை தெற்கை பொறுத்தவரை செந்தில்பாலாஜி கரூரில் இருந்து கொண்டு வந்திருக்கக் கூடிய, 18 சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒரே நோட்டரி தான் கையெழுத்து போட்டுள்ளார். வேற ஆள் கிடைக்கவில்லையா?
திமுகவின் தோல்வி கோவை கொங்கு மண்டலத்தில் தான் ஆரம்பிக்கும். இங்கு தோல்வி ஆரம்பித்து சேப்பாக்கத்தில் முடியும். எடப்பாடியில் திமுக மாற்று வேட்பாளர் யார்? வேட்பாளரின் மனைவி. வேட்பாளர் பிரமாண பத்திரத்தில் அவரின் மனைவி கையெழுத்து போட்டுள்ளார். அதை பரிசீலனையின் போது நிராகரித்து இருக்க வேண்டும்.
சேப்பாக்கத்தில் உதயநிதியின் வேட்பு மனுவில் எங்கெங்கு முதலீடு செய்துள்ளனர் என்பதையும் விட்டுவிட்டனர். எனவே திமுகவின் தோல்வி வேட்பாளர்கள் பரிசீலனையின் போது ஆரம்பித்துவிட்டது. அரசு அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். எதிர்தரப்பினர் கோர்ட்டுக்கு போக உள்ளனர். எங்கேயாவது என்டிஏ வேட்பாளருக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டதா?
வானதி சீனிவாசனுக்காக நிறைய தன்னார்வலர்கள் வேலை செய்யத்தான் போகின்றனர். ஆனால் கரூரீல் இருந்து ஆட்களை கொண்டு வந்து,பாக்கெட்டுகளில் பணத்தை வைத்துக் கொண்டு வீதி, வீதியாக நடந்துபோய் பணம் பிடியுங்க, குண்டா, அண்டா வேண்டுமா பிடியுங்க, ஸ்மார்ட் வாட்ச் வேணுமா பிடியுங்க என்று கோவை திமுகவை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது யார்? செந்தில் பாலாஜி தான்.
கரூரைச் சேர்ந்தவர்கள், செந்தில் பாலாஜி சேர்த்து வைத்துள்ள சொத்துகளை கந்துவட்டிக்கு கொடுத்திருக்கக் கூடிய அவரின் பினாமிகளை கோவை கொண்டு வந்து வீடு, வீடாக பணத்தை இறைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதை தான் நாம் குற்றம்சாட்டுகின்றோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
