கோவை: கோவை மாவட்டத்தில், 9 தொகுதிகளில் அ.தி.மு.க. களமிறங்குகிறது.
2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளிலும், பா.ஜ. ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அதேபோல் இப்போதும் களம் இறங்குகின்றன. பா.ஜ.வுக்கு தெற்குக்கு பதிலாக வடக்கு தரப்பட்டுள்ளது.
தெற்கு தொகுதியில் அ.தி.மு.க.வே மீண்டும் போட்டி போடுகிறது. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனனுக்கு 2வது வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. இவர் போட்டியிட மாட்டார், உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு தரப்படும் என்றெல்லாம் பரப்பப்பட்டது. வடக்கை எதிர்பார்த்த, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் வடவள்ளி சந்திரசேகருக்கு, தெற்கில் சீட் கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், அம்மனே வேட்பாளர் ஆகியிருக்கிறார். சந்திரசேகருக்கு, வாரிய தலைவர் பதவி வழங்கப்படுமாம்.
கிணத்துக்கடவு தாமோதரன், உடல் நலத்தை காரணம் காட்டி, இம்முறை போட்டியிட விரும்பவில்லை என தகவல் பரவியது. அதனால், பா.ஜ. சீட் கேட்டது. அண்ணாமலை தனது ஆதரவாளரான வசந்தராஜனுக்கு இத்தொகுதியை கேட்டார். ஆனால், கோவையில் 1 தான், அதுவும் வடக்குதான் என கூறி, கிணத்துக்கடவில் அ.தி.மு.க. நிற்கிறது. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
குடும்ப ஆதிக்கம் என்கிற முத்திரை விழுந்து விடும் என்பதால், சண்முகராஜாவுக்கு கொடுக்காமல், தாமோதரனுக்கே இன்னொரு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜுக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜுக்கு சீட் கிடைத்துள்ளது.
செங்கோட்டையனுக்கு எதிராக போட்டியிடும் வகையில் ஏ.கே.செல்வராஜுக்கு கோபி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை தவிர்த்து, ராஜ்யசபா எம்.பி. அல்லது லோக்சபா சீட் தரப்படும் என கூறி சமாதானம் செய்துள்ளனர்.
வால்பாறையில் அமுல் கந்தசாமி இறந்ததால், கோவை புறநகர் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் லட்சுமண சிங் போட்டியிடுகிறார். இவர், தீவிர வேலுமணி ஆதரவாளர்.
மற்ற தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களே களம் காண்கின்றனர். தொண்டாமுத்துார் வேலுமணி, கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலுார் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள். இம்முறையும் வென்று கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என நிரூபிப்பார்களா என்பதை பார்க்க வேண்டும்.
