கோவை: தமிழக அரசின் உத்தரவுக்கு மாறாக, காந்திபுரம் சந்திப்பில் விநாயகர் கோயிலுக்கு எதிரே நிறுவியுள்ள ஈ.வெ.ரா.,

கோவை: தமிழக அரசின் உத்தரவுக்கு மாறாக, காந்திபுரம் சந்திப்பில் விநாயகர் கோயிலுக்கு எதிரே நிறுவியுள்ள ஈ.வெ.ரா., சிலையை, ஏற்கனவே அனுமதி பெற்ற இடத்துக்கு மாற்றுவதற்கு மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுகின்றன.

கோவை காந்திபுரம் சந்திப்பில் உள்ள சாலைத்தீவு திடலில், லட்சுமி மில்ஸ் நிர்வாகம் சார்பில் ராஜாஜி சிலை நிறுவப்பட்டு இருந்தது. சத்தி ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு திரும்பும் இடத்தில், ஈ.வெ.ரா., சிலை இருந்தது. 2015ல் நஞ்சப்பா ரோட்டில் மேம்பாலம் கட்டியபோது, இவ்விரு சிலைகள் அகற்றப்பட்டன.

சில மாதங்களுக்கு முன், மாநகராட்சியால் சாலைத்தீவு திடல் உருவாக்கப்பட்டது. ஈ.வெ.ரா., சிலை இருந்த இடத்தில், தனியார் நிறுவனம் சந்திராயன் ராக்கெட் மாதிரி நிறுவியது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தி.க.,வினர், ராஜாஜி சிலை இருந்த சாலைத்தீவு திடலில், விநாயகர் கோவிலுக்கு எதிரே உள்ள இடத்தில், உள்நோக்கத்துடன் ஈ.வெ.ரா., சிலையை நிறுவினர்.

இதற்கு நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறையில் தற்போது அனுமதி பெறவில்லை. மாறாக, 2016ல் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானம், 1998ல் தமிழக அரசு கொடுத்த அனுமதியை ஆதாரமாக காட்டுகின்றனர்.

அரசாணை மீறல்

சத்தி ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு திரும்பும் மூலையில், சிலை வைக்கவே தமிழக அரசு அனுமதி தந்தது. தற்போது பாரதியார் ரோட்டில் இருந்து நஞ்சப்பா ரோட்டுக்கு திரும்பும் இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. வேறிடத்தில் சிலை நிறுவ, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அரசு துறைகளில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பெறாமல், 2016ல் நிறைவேற்றிய பழைய தீர்மானத்தை வைத்து, ராஜாஜி சிலை இருந்த இடத்தில், ஈ.வெ.ரா., சிலையை நிறுவி உள்ளனர். இது, அரசாணையை மீறிய செயல் என்பதால், மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசாரிடம் மாவட்ட நிர்வாகம் விளக்கம் கோரியது.

மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கள ஆய்வு செய்து, பழைய ஆவணங்களை ஆராய்ந்தனர். அதில், தமிழக அரசின் அனுமதிக்கு மாறாக சிலை நிறுவி இருப்பதை கண்டறிந்தனர். அதனால், ‘காந்திபுரம் சந்திப்பில் ஈ.வெ.ரா., சிலை நிறுவ தற்போது அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி நிறுவிய சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டு, மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை கடிதம் அனுப்பியது.

அதிகாரிகள் மவுனம்

ஆனால், சட்டசபை தேர்தல் சூழலை கருத்தில் கொண்டு, அரசியல் அழுத்தம் வரலாம் என நினைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர். அனுமதிக்கு மாறான இடத்தில் சிலையை நிறுவியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூட, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தயக்கம் காட்டுகின்றன.

Source link