கோவை: தேர்தல் களம் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள், கருத்துகளை நிர்வாகிகள் வழங்கி உள்ளனர். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போது ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுச்சியான வரவேற்பு அளித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இது.
நாளை தான் வேட்புமனு தாக்கல் செய்கிறோம். வேட்பு மனு முடியட்டும்…தேர்தல் கமிஷன் எப்படி செயல்படுகிறது என்று சொல்கிறோம். தேர்தல் களம் எப்படி போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம், அவசரத்தில் எதுவும் பதில் சொல்ல முடியாது. பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நாங்கள் முழுவதுமாக குறித்து வைத்துக் கொள்கின்றோம்.
தேர்தல் முடிவு நாளான 4ம் தேதிக்கு பின்னர் அரசு அமைந்தவுடன், அந்த கோரிக்கைகளை ஓராண்டுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம்.
இவ்வாறு செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார்.
