கோவை: பீளமேடு தண்ணீர்பந்தல் சாலையிலுள்ள பா.ஜ. நிர்வாகியின் இல்லத்தில், அண்ணாமலை தனது ஆதரவாளர்களை அழைத்து தனிக்கூட்டம் நடத்தியதாக வதந்தி பரவியது. இதையறிந்த அண்ணாமலை, உடனடியாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை, தொண்டர்கள் பலரும் நேரில் சந்திக்கவும், அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அவர் பீளமேடு தண்ணீர்பந்தல் சாலையிலுள்ள பா.ஜ.நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமியின் இல்லத்துக்கு சென்றார். தகவலறிந்த ஏராளமான தொண்டர்கள் அங்கு திரண்டனர். அண்ணாமலையுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
தகவல் பரவியதால் மேலும் பலர் அங்கு திரளத்துவங்கினர். இதையடுத்து அண்ணாமலை அவரது ஆதரவாளர்களுடன் ரகசிய கூட்டம் நடத்துகிறார் என்ற வதந்தி பரவியது. இது கட்சி தலைமைக்கும் சென்றது. கட்சி தலைமையிலிருந்து அழைத்து விசாரித்தனர்.
இதையடுத்து அண்ணாமலை கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில், ”கட்சித்தலைமை எந்த தொகுதியில் நின்று போட்டியிடசொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். இன்று என்னுடன் தொண்டர்கள் போட்டோ எடுக்க விருப்பப்பட்டதால் வந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். நான் ரகசியமாக ஆதரவாளர்களோடு கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை,” என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
