மும்பை: இந்திய அணியின் பைனல் கனவை நனவாக்கியதில் அக்சர் படேலுக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது அற்புதமான இரு ‘கேட்ச்’ அரையிறுதியில் திருப்புமுனை ஏற்படுத்தியது.
இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி (253/7), இங்கிலாந்தை (246/7) வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.
கபில்தேவ் வழியில்: இப்போட்டிக்கு முன் 13 ‘கேட்ச்’களை கோட்டைவிட்ட இந்திய அணிக்கு, இம்முறை அக்சர் படேல் நம்பிக்கை தந்தார். பும்ரா பந்தை (4.1வது ஓவர்), இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் (7) துாக்கி அடித்தார். இதை பிடிக்க, 24 மீ., பின்னோக்கி ஓடிய அக்சர் படேல், கையை நீட்டி அற்புத ‘கேட்ச்’ பிடித்தார். இது 1983, உலக கோப்பை பைனலில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை நீண்ட துாரம் ஓடி பிடித்த கபில்தேவ் சாகசத்தை நினைவுபடுத்தியது. இதே போல அர்ஷ்தீப் பந்தை (13.6), வில் ஜாக்ஸ் அடிக்க, எல்லை அருகே பிடித்த அக்சர் படேல் தடுமாறினார். உடனே பந்தை சாமர்த்தியமாக மைதானத்திற்குள் இருந்த ஷிவம் துபே வசம் எறிந்தார். துபே பிடிக்க, ஜாக்ஸ் அவுட்டானார். இந்த ‘ரிலே கேட்ச்’ அக்சர் படேலின் திறமையை உணர்த்தியது. தனது ‘சுழலில்’ பான்டனை போல்டாக்கினார். அணிக்கு தேவையான போது பேட்டிங்கிலும் கைகொடுக்கும் அக்சர் படேல், சகலகலா வல்லவனாக திகழ்கிறார். நாளை ஆமதாபாத்தில் நடக்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான பைனலிலும் சாதிக்க காத்திருக்கிறார்.
இது பற்றி அக்சர் படேல் கூறியது: இங்கிலாந்து பேட்டர்கள் அடித்த பந்துகள் என்னை அடிக்கடி துரத்தின. இரு ‘கேட்ச்’களில், ஹாரி புரூக் அடித்த பந்தை பிடித்தது தான் சிறந்தது. ‘பீல்டிங்’ அடிப்படையில் மிகவும் கடினமானது. போட்டியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டால், ஜாக்ஸ் கொடுத்த ‘கேட்ச்’சை பிடித்தது முக்கியமானது. அப்போது பெத்தல்-ஜாக்ஸ் மிரட்டி கொண்டிருந்தனர். எனது ‘கேட்ச்’ மூலம் ஆபத்தான ‘பார்ட்னர்ஷிப்பை’ பிரிக்க முடிந்தது. பும்ரா, அர்ஷ்தீப் சிங்கிற்கு தலா இரு ஓவர்கள் மீதமிருந்ததால், இப்போட்டியில் வெல்வது உறுதி என நம்பினோம்.
ஆமதாபாத்தில் 2023ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதில் நான் விளையாடவில்லை. இம்முறை சிறப்பாக செயல்பட்டு ஆமதாபாத்தை அதிர்ஷ்ட மைதானமாக மாற்றுவோம். எனது சொந்த ஊரில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஐ.சி.சி., உலக கோப்பை பைனலில் விளையாட உள்ளேன். போட்டியை காண எனது மகன், குடும்பத்தினர் நேரில் வர உள்ளனர். இவர்கள் முன்னிலையில் விளையாடுவது பெருமையான தருணமாக இருக்கும்.
இவ்வாறு அக்சர் படேல் கூறினார்.
நம்பமுடியவில்லை
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,”ஹாரி புரூக் அடித்த பந்தை பார்த்துக் கொண்டே ஓடிய அக்சர் படேல், நம்பமுடியாத ‘கேட்ச்’ பிடித்தார். ஜேக்ஸ் அடித்த பந்தை பிடித்து, அதை புத்திசாலித்தனமாக துபே வசம் ‘த்ரோ’ செய்தார். ‘பவுலிங்’, ‘பேட்டிங்’, ‘பீல்டிங்’ என கிரிக்கெட்டின் அனைத்து துறையிலும் அசத்தும் இவர், இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ஜொலிப்பார். ரவிந்திர ஜடேஜா ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை பூர்த்தி செய்கிறார்,”என்றார்.
பும்ரா போல வருமா
இங்கிலாந்து அணிக்கு 18 பந்தில் 45 ரன் தேவைப்பட்டன. சதம் அடித்த பெத்தல் அச்சுறுத்தி கொண்டிருந்தார். அப்போது 18வது ஓவரை வீசிய இந்திய ‘வேகப்புயல்’ பும்ரா, வெறும் 6 ரன் கொடுத்து திருப்பம் ஏற்படுத்தினார். இது பற்றி கவாஸ்கர் கூறுகையில்,”முக்கிய கட்டத்தில் அணிக்கு கைகொடுப்பவர் பும்ரா. இவர், ஒருதலைமுறைக்கான பவுலர் அல்ல. நுாறு ஆண்டுக்கு ஒரு முறை தோன்றும் அதிசய பவுலர். டெஸ்ட், 50 ஓவர், ‘டி-20’ என அனைத்துவித போட்டிகளிலும் அசத்துகிறார். சொந்த மண்ணில் இந்தியா ‘டி-20’ உலக கோப்பை வென்றால், அது ‘ஸ்பெஷல்’ தருணமாக இருக்கும்,”என்றார்.
சாம்சன் விருப்பம்
வெஸ்ட் இண்டீஸ் (97 ரன்), இங்கிலாந்துக்கு (89) எதிராக அசத்திய சாம்சன், அடுத்து பைனலில் சாதிக்க ஆர்வமாக உள்ளார். சாம்சன் கூறுகையில்,”இங்கிலாந்துக்கு எதிராக கடைசி கட்டத்தில் பும்ரா மிரட்டினார். ஆட்டநாயகன் விருதை எனக்கு பதிலாக அவருக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். கடந்த சில போட்டிகளில் நாட்டுக்காக சிறப்பாக விளையாடியது நிம்மதி தருகிறது. உலக கோப்பை வெல்ல இன்னும் ஒரு படி தான் உள்ளது. பைனலில் இன்னொரு சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினால் நன்றாக இருக்கும்,”என்றார்.
அபிஷேக் சர்மா எப்படி
‘டி-20’ உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா சொதப்புகிறார். 6 இன்னிங்சில் 0, 0 ,0, 15, 10, 9 ரன் என ஏமாற்றினார். ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டும் அரைசதம் அடித்தார். நாளை நடக்கும் பைனலில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் இவருக்கு ஆதரவாக உள்ளது. சாம்சன் கூறுகையில்,”அபிஷேக் மீது பயிற்சியாளர் காம்பிர், கேப்டன் சூர்யகுமார் நம்பிக்கை வைத்துள்ளனர்,”என்றார்.
