சங்கீதா மீது அவதூறு பரப்பும் தவெக தொண்டர்கள்; நடிகர் விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்

சென்னை: சங்கீதா மீது தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை கண்டிக்காமல் அவரது கணவரும், தவெக தலைவருமான விஜய் மவுனம் காப்பது கண்டனத்துக்குரியது என்று அனைத்திந்திய மாதர் சங்கம் கூறி உள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை;

திரைப்பட நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். அவரின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.

அது இரு நபர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் உரிய விஷயமே தவிர, அதை சமூக வலை தளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால், விஜய் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் அக் கட்சியின் தொண்டர்கள் சமூக வலை தளங்களில் சங்கீதாவை குறிவைத்து, ஆபாசமான,இழிவான ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை பதிவுகள், கேலிச் சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

திரைப்பட நடிகராக இருப்பது ஒரு தனிப்பட்ட தொழில். ஆனால் அரசியல் கட்சி தொடங்கி, மக்களிடம் ஆதரவு கோரும்போது, அந்த நபர் பொது வாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக மாறுகிறார். இந்த நிலையில், விஜய்யின் பெயரை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சங்கீதாவை ஆபாசப்படுத்தி பதிவுகள் பரவும்போது அதை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த மவுனம், அந்த செயல்களுக்கு மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்.

எனவே ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல், சமூக பொறுப்பு. இத்தகைய வலைதள வன்முறைக்கு மௌனம் காப்பதும் குற்றத்திற்குச் சமமானதாகும்.

சங்கீதா மீது சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை, ஆபாச, இழிவான தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. ஆபாச அவதூறு பரப்புபவர்கள் மீது தவெக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த ஆபாச பிரசாரத்தை கண்டித்து எதிர்வினை ஆற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link