சசி தரூர் மகன் உட்பட 300 பேரை பணி நீக்கம் செய்தது வாஷிங்டன் போஸ்ட்!

நமது நிருபர்

அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மகன் இஷான் தரூர் உட்பட 300 பேர் வேலை இழந்துள்ளனர்.

தி வாஷிங்டன் போஸ்ட் என்பது அமெரிக்க நாளிதழ். அமெரிக்காவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த செய்தித்தாள் தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது வாஷிங்டன், மேரிலாந்து, வர்ஜீனியா பகுதிகளில் இருந்து பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. விளையாட்டு செய்திப்பிரிவு, பல நாடுகளில் செயல்பட்ட சர்வதேச செய்திப்பிரிவுகள், புத்தகம் தொடர்பான பிரிவு ஆகியவை மூடப்பட்டுள்ளன. டில்லி மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய ஆசிரியர்கள், செய்தியாளர்கள் என 300 ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர்.

அவர்களில், 10 ஆண்டுக்கு மேலாக சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்த இஷான் தரூரும் ஒருவர். இவர், காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் மகன். பத்திரிகை அலுவலகத்தின் செய்தி அறை காலியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இஷான் தரூர், ‘இன்று மோசமான நாள்’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நான் வாஷிங்டன் போஸ்டிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன், பெரும்பாலான சர்வதேச செய்திப்பிரிவு ஊழியர்கள் பணியை இழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக எனது நண்பர்களாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களுடன் நானும் மனம் உடைந்தேன். அவர்களுடன் பணியாற்றியது ஒரு மரியாதையாக கருதுகிறேன். இவ்வாறு இஷான் தரூர் கூறியுள்ளார்.

Source link