சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: மக்களை கவர புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

சென்னை: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டசபையில் நாளை (பிப்ரவரி 17) தமிழக அரசு சார்பில், 2026 – 27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., அரசின் பதவிக்காலம், வரும் மே மாதம் நிறைவடைய உள்ளது. எனவே, தமிழக சட்டசபைக்கு, ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு, தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி, 24ம் தேதி நிறைவடைந்தது.

அடுத்த கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளது. நாளை காலை 9:30 மணிக்கு, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டசபை கூட்டரங்கில், 2026 – 27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இது, இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில், ஆளுங்கட்சியான தி.மு.க., உறுதியாக உள்ளது. எனவே, பெண்களை கவர, மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை 3,000 ரூபாய்; கோடைக்கால சிறப்புத்தொகை 2,000 ரூபாய் என, தலா 5,000 ரூபாயை, 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது.

தி.மு.க.,வின் வெற்றிக்கு, சிறுபான்மையின மக்களின் ஆதரவு பெரும் உதவியாக உள்ளது. ஆனால், விஜய் வருகையால், கிறிஸ்துவர்கள் ஓட்டு அவருக்கு செல்ல வாய்ப்புள்ளது. இளைஞர்கள் ஓட்டும் அதிக அளவில் செல்லும் என்று கூறப்படுகிறது. எனவே, சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்க வைக்கவும், இளைஞர்களை கவரவும், இடைக்கால பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியாகலாம்.

மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கியது உட்பட, பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால், இக்கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும், காங்கிரஸ் – தி.மு.க., இடையேயான மோதலும், சட்டசபையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link