சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டியிடணும்: நாடார் சங்கம், நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை

துாத்துக்குடி: சட்டசபை தேர்தலில், தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழியை வேட்பாளராக அறிவிக்குமாறு, நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் நாடார் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி.மு.க., துணைப் பொதுச்செயலரான கனிமொழி, தற்போது துாத்துக்குடி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். அவர், சட்டசபை தேர்தலில் களமிறங்கி, மாநில அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்செந்துார் தொகுதியில் அவர் போட்டியிடுவார் எனவும் கூறப்பட்டது.

நம்பிக்கை நட்சத்திரம்

ஆனால், மாநில அரசியலுக்கு கனிமொழி வந்தால், துணை முதல்வர் உதயநிதிக்கு சிக்கல் ஏற்படும் என, கனிமொழி போட்டியிடுவது குறித்து, தி.மு.க., தலைமை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.

அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்த திருச்செந்துார் எம்.எல்.ஏ.,வான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீண்டும் போட்டியிடும் வகையில், தேர்தல் பணியை துவக்கி உள்ளார்.

இந்நிலையில் திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட, கனிமொழிக்கு வாய்ப்பு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு, நெல்லை — துாத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தினர் அனுப்பிய கடிதத்தில், ‘தென் மாவட்டங்களுக்கும் மகளிர் உரிமைகளுக்கும் பெண் பிள்ளைகளின் நலனுக்கும் சிறந்த பாதுகாப்பான அரசியல் தலைவரான கனிமொழிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கத்தோலிக்க சங்க தலைவர் வின்சென்ட் வேதராஜ் அனுப்பிய கடிதத்தில், ‘பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும், தங்களின் தங்கை கனிமொழியை, தமிழகத்தின் முழுநேர அரசியலுக்கு அழைத்து வர வேண்டும். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், கனிமொழியை தி.மு.க., வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பறை இசைக் கலைஞர் வேலு ஆசான்,”சென்னை சங்கமம் நிகழ்வை துவக்கி, கிராமிய கலைஞர்களுக்கு, கலை நி கழ்ச்சி வாய்ப்புகளையும் புகழையும் பெற்றுத் தந்தவர், கனிமொழி. மாநில அரசியலில், அவர் இருந்தால், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும், கலை பாதுகாப்பிற்கும் உதவியாக இருப்பார்,” என தெரிவித்து உள்ளார்.

ஓரளவுக்கு நல்ல சோறு

திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புறக் கலைஞருமான அந்தோணி தாசன், ”நாட்டுப்புறக் கலை மற்றும் கலைஞர்களை, கனிமொழி மீட்டெடுத்ததால் தான், தற்போது, அந்த கலைஞர்கள், ஓரளவுக்கு நல்ல சோறு சாப்பிட்டு நல்ல நிலையில் உள்ளனர்.

”அவரால் தான், கலைஞர்களுக்கான நல வாரியம் துவக்கப்பட்டது. அவர், சட்டசபை தேர்தலில் வென்றால், மக்களுக்கும் நல்லது செய்வார்,” என கூறியுள்ளார்.

இதுபோல, பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களும், கனிமொழியை மாநில அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

மாநில அரசியலுக்கு வாங்க!

கோவையில், பா.ஜ.,விற்கு சில தொகுதிகளை வழங்கவில்லை என பா.ஜ.,வினர் போராட்டங்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும். தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, தமிழக பிரச்னைகளை பேசவும் அவர்களது கட்சியை வளர்க்கவும் மாநில அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.
சமூக நீதி பேசும் தி.மு.க.,வி ல், முதல்வரின் மகன் தான் அடுத்த முதல்வராக வேண்டும் என்ற எண்ணம், முதல்வர் குடும்பத்தில் மேலோங்கியுள்ளது. தி.மு.க.,வில் பொறுப்பும் உரிமையும் பெண்களுக்கு இரண்டாவதாகத்தான் வழங்கப்படுகிறது.
– வானதி, பா.ஜ., – எம்.எல்.ஏ.,

Source link