– நமது நிருபர் –
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு கிடைக்குமா? என்பதை எதிர்பார்த்து, கட்சிகளில் விருப்பமனு செய்த அரசியல்வாதிகள், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குலதெய்வம் மற்றும் பரிகார கோவிலுக்கு படையெடுப்பை தொடங்கியுள்ளனர்.
வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. த.வெ.க., கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. இத்தேர்தலில், 4 முனை போட்டி ஏற்படும் நிலை உள்ளது. ஒவ்வொரு கட்சியிலும், சில, பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள், எப்படியாவது, ‘சீட்’ பெற வேண்டும் என, அக்கட்சி தலைமை மற்றும் உயர் மட்ட நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.
‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,க்கள் பலர், மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என, குலதெய்வம், பரிகார கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். சிலர், ஜோதிடர்களின் ஆலோசனை பெற்று, கேரள நம்பூதிரிகளை அழைத்து வந்து, மந்திர உச்சாடனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சி பிரபலங்கள், உறவினர்கள் மூலம் புகைப்படம், ஜாதகத்தை, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள காளி கோவிலுக்கு கொண்டு சென்று, அங்கு, ‘யாஸ்ரிலேகா கலாகேந்திரா’ எனும் பூஜை செய்கின்றனர். அப்போது வழங்கப்படும் தகட்டை, பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் நினைத்தது நடக்கும், சீட் கிடைக்கும் என நம்புகின்றனர்.
குறிப்பாக சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கோவில்கள் மட்டுமின்றி பிரபல ஜோதிடர்கள், கேரள பிரசன்ன ஜோதிடர்களிடம் முன் அனுமதி பெற்று, குடும்பத்தினருடன் சென்று, ஜாதகங்களை கொடுத்து ‘சீட்’ கிடைக்குமா? என்றும், அதற்கான பரிகாரமும் கேட்டு, முக்கிய கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
நேற்று சனி பெயர்ச்சியின்போது சிவன் கோவில்களில் அரசியல் கட்சியினர், குடும்பத்தினர் மூலம் பரிகார பூஜை செய்ததோடு, முக்கிய கோவில்களுக்கும் வாடகை, நண்பர்களது கார்களில் சென்றனர்.
இதுகுறித்து சில ஜோதிடர்கள் கூறியதாவது: சுக்கிரன், சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள் தான், அரசியலில் வெற்றி பெற முடியும். இதனால் சுக்கிரன் வடிவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு அரசியல் கட்சியினர் செல்வது அதிகரித்துள்ளது. மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், சங்கரன் கோவில் கோமதி அம்மன் கோவில்கள், கிழக்கு திசை நோக்கி உள்ளன. அரசியல் வெற்றிக்கு சூரியன் ஆதிக்கம் முக்கியம். ஆண்டாளை வழிபட்டால் செல்வ செழிப்பு, அதிகார பதவிகள் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரத்தினர் வழிபடுகின்றனர்.
அரசியல் கட்சியினர், அவர்களது ஜாதகம் மட் டுமின்றி மனைவி, மகள், மகன் ஜாதகத்தையும் பார்த்து, அதற்கேற்ப விருப்ப மனு அளித்து, பரிகாரம் செய்கின்றனர். சனி பெயர்ச்சிக்கு பின் முக்கிய கோவில்களில், பிரபலங்கள், அவர்களது குடும்பத்தினர் வருகை, இன்னும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
